புதுடெல்லி: நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மறுப்பு தெரிவித்துள்ளார். நீதிபதி வர்மாவின் மனுவை வேறு அமர்வு விசாரிக்கும் என்று தலைமை நீதிபதி கவாய் அறிவித்தார். நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரப்பட உள்ள நிலையில் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி யஷ்வந்த் வர்மா மனுத்தாக்கல் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா டெல்லி ஐகோர்ட்டில் பணியாற்றிய போது, அங்கு உள்ள அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் கடந்த மார்ச் 14 அன்று தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க வந்த அதிகாரிகள், அவரது பங்களாவின் ஒரு பகுதியில் ரூ. 15 கோடி அளவிற்கு பணம் கட்டுக்கட்டாக இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடமிருந்து நீதிமன்றப் பணிகள் அனைத்தும் பறிக்கப்பட்டன.
தொடர்ந்து, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, இதுகுறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட குழுவை அமைத்தார். அந்த விசாரணை அறிக்கை, பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில், நீதிபதி யஷ்வந்த் வர்மாவைப் பதவி நீக்கம் செய்ய அக்குழு பரிந்துரை செய்திருந்தது. மேலும் அவரை டெல்லி உயர் நீதிமன்றத்தில் இருந்து அலகாபாத் உயர் நீதிமன்றத்திற்கு இட மாற்றம் செய்தது. அங்கும் அவருக்கு எந்தவித பணியும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில், நீதிபதி வர்மாவிற்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்தை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. இதற்காக எம்பிக்களிடம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனக்கு எதிரான பதவி நீக்கப் பரிந்துரையை எதிர்த்து நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘உச்ச நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட குழு, தனக்கு முழுமையான மற்றும் நியாயமான விசாரணையை வழங்காமல், தனக்கு எதிராக ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுத்துள்ளது.
எனது வீட்டில் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் பணம் தொடர்பான அடிப்படை உண்மைகளை, குறிப்பாக அதன் உரிமையாளர் யார்?, அதன் நம்பகத்தன்மை போன்றவற்றை விசாரிக்கக் குழு தவறிவிட்டது. அந்தப் பணத்தை நானோ அல்லது எனது குடும்பத்தினரோ அங்கு வைக்கவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார். நீதிபதி வர்மாவின் இந்த மனு, பதவி நீக்க விவகாரத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியது. பதவி நீக்கம் செய்ய முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்ததையும் எதிர்த்து மனுவில் முறையீட்டிருந்தார். தான் விளக்கம் அளிக்க வாய்ப்பே தராமல் வளாக விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்துள்ளதாக குற்றச்சாட்டு வைத்தார். உறுதியான ஆதாரம் எதுவும் இல்லாமல் முன்முடிவுடன் வளாக விசாரணை குழு செயல்பட்டுள்ளதாக வர்மா புகார் அளித்தார்.
இதுகுறித்து ஒன்றிய சட்ட அமைச்சர் கூறியதாவது, அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவி நீக்கத் தீர்மானம் கொண்டுவருவது முற்றிலும் எம்.பி.க்களின் விஷயம். இதில் ஒன்றிய அரசுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,’ ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற, மக்களவையில் குறைந்தது 100 உறுப்பினர்களின் ஆதரவும், மாநிலங்களவையில் 50 உறுப்பினர்களின் ஆதரவும் தேவை’ என கூறியிருந்தார்.