Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உலக நன்மைக்காக ராமேஸ்வரம் கோயிலில் ஜப்பான் பக்தர்கள் பூஜை

ராமேஸ்வரம்: உலக நன்மை வேண்டி ஜப்பான் பக்தர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் சிறப்பு பூஜை நடத்தி ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு வழிபாடு செய்தனர். ஜப்பான் தலைநகர் டோக்கியோ பகுதியை சேர்ந்த ஜப்பானிய சிவா ஆதீனம் பால கும்ப குரு முனியின் தலைமையில் அவர்களது சீடர்கள் 20 பேர், இந்தியாவில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜை வழிபாடு நடத்த கடந்த 3 வாரங்களுக்கு முன்பு கிளம்பி வந்தனர். இவர்கள் முதலில் புதுச்சேரியில் உள்ள பிரத்தியங்கிரா தேவி கோயிலில் உலக நன்மைக்காக பூஜை வழிபாடு நடத்தினர். தொடர்ந்து கும்பகோணம், பழநி ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடு நடத்தினர். திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவில் கலந்து கொண்டு முருகனை தரிசித்து பின் நேற்று முன்தினம் ராமேஸ்வரம் வந்தனர்.

அதிகாலையில் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிவிட்டு கோயில் உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினர். பின் ராமநாதசுவாமி கோயில் எதிரே தனியார் மண்டபத்தில் கோயில் ருத்ரா ஹோம பூஜை செய்தனர். அதை தொடர்ந்து கோயில் உள்ளே விஸ்வரூப ஆஞ்சநேயர், ஆத்மலிங்கம், வல்லப விநாயகர், முருகர், நந்தீஸ்வரர் ஆகிய சன்னதிகளில் வழிபட்டு பின் ராமநாதசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வணங்கினர். பின் பர்வதவர்த்தினி அம்பாள், பள்ளி கொண்ட பெருமாள் சுவாமிகளை தரிசனம் செய்து உலகப் பிரசித்தி பெற்ற மூன்றாம் பிரகாரத்தை பார்வையிட்டனர்.

ஆன்மீக பயணம் குறித்து ஜப்பானிய சிவா ஆதீனம் பால கும்ப குரு முனியின் கூறுகையில், ‘‘இந்து கோயில்களை வழிபடுவதில் மன அமைதியும், ஆன்மீக முன்னேற்றமும் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இதேபோல் சீடர்களுடன் இந்தியா வந்து இந்து கோயில்களில் வழிபாடு நடத்தி தரிசனம் செய்கிறோம். உலக அமைதி ஏற்பட்டு அனைவரிடத்திலும் ஆன்மிகம் வளர வேண்டும்’’ என்றார்.