ஜம்மு-காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் 3 பயங்ரவாதிகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். கதுவா மாவட்டத்தில் கடந்த மே 1 ம் தேதி பயங்ரவாதிகளுடனான தாக்குதலில் கிராம பாதுகாப்பு அலுவலர் கொல்லப்பட்டார். முன்னதாக கடந்த ஏப்ரல் 29 ம் தேதி 2 தீவிரவாத அமைப்புகள் எல்லைகள் வழியாக ஊடுருவியிருப்பதாக காவல்துறை கூடுதல் தலைமை இயக்குநர் ஆனந்த் ஜெயின் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை காஷ்மீரின் குல்காம் மாவட்டம் ரெட்வானி பெயன் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் பாதுகாப்புப்படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பதிலடி கொடுத்த பாதுகாப்புப்படையினர் 3 தீவிரவாதிகளை என்கவுண்டரில் இன்று சுட்டுக்கொன்றனர். என்கவுண்டர் நடைபெற்ற இடத்தில் மேலும் சிலர் பதுங்கி இருக்கலாம் என்பதால் பாதுகாப்புப்படையினர் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டனர். தீவிரவாத தடுப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்ட 2 பயங்கரவாதிகளின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன நிலையில் அவர்களது அடையாளம் மற்றும் தொடர்பு கண்டறியப்பட்டு வருகிறது.