Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஈஷாவில் சத்குரு முன்னிலையில் கொண்டாடப்பட்ட குரு பௌர்ணமி விழா: தியானலிங்கத்திற்கு கிராம மக்கள் பால் குடத்துடன் வந்து அபிஷேகம்

கோவை: கோவை ஈஷா யோக மையத்தில் 'குரு பௌர்ணமி விழா', சத்குரு முன்னிலையில் இன்று (10/07/25) வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. இதனுடன் நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மற்றும் பழங்குடியின மக்கள் பால் குடத்துடன் பவனி வந்து, அவர்கள் கைகளினாலேயே தியானலிங்கத்திற்கு பால் அபிஷேக அர்ப்பணம் செய்தனர்.

ஆதியோகி சிவன் சப்தரிஷிகளாகிய தனது ஏழு சீடர்களுக்கு, ஒரு பௌர்ணமி நாளில் தென்திசை நோக்கி அமர்ந்து யோக அறிவியலை வழங்கினார். உலகில் அந்த நாளில்தான் முதலாவது குரு அவதரித்ததாக கருதப்படுகிறது. மேலும் அந்த நாள் ‘குரு பௌர்ணமி’ நாளாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. நம் பாரத கலாச்சாரத்தில் குரு பௌர்ணமி நாளானது, குருவிற்கு நன்றியை வெளிப்படுத்தி, குருவருளையும் ஆசியையும் பெரும் நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் ஈஷாவில் ஆண்டுதோறும் குருபௌர்ணமி விழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு கொண்டாட்டங்கள் சத்குரு முன்னிலையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஈஷா யோக மைய வளாகம் முழுவதும் பூ மாலை தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.

குரு பௌர்ணமியை முன்னிட்டு காலையில் நூற்றுக்கணக்கான உள்ளூர் கிராம மற்றும் பழங்குடி மக்கள் ஈஷா தன்னார்வலர்களுடன் இணைந்து, ஆதியோகி முதல் தியானலிங்கம் வரை பால் குடத்துடன் பவனி வந்தனர். பின்னர் தியானலிங்கத்திற்கு அவர்களின் கைகளினாலேயே பால் அபிஷேக அர்ப்பணம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாலையில் சத்குருவின் அருளுரை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் இதில் பங்கேற்றனர். இசை நிகழ்ச்சியில் மோஹித் சௌகான், பார்த்திவ் கோஹில் உள்ளிட்ட தலைசிறந்த இசை கலைஞர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் மொத்தம் 103 இடங்களில் சத்குருவின் சத்சங்க நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பு செய்யப்பட்டது.

குரு பௌர்ணமி நாள் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள சத்குரு, “15,000 ஆண்டுகளுக்கு முன்பு, குருபௌர்ணமி எனும் அந்தப் பௌர்ணமி நாளன்று, ஆதியோகி தன் கவனத்தைச் சப்தரிஷிகள் மீது திருப்பினார். மனிதகுல வரலாற்றிலேயே முதன்முறையாக, நாம் இயற்கையின் எளிய விதிகளுக்குள் கட்டுண்டு கிடக்க வேண்டிய அவசியமில்லை என்பது மனிதர்களுக்கு நினைவூட்டப்பட்டது. இந்தக் கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்வது எப்படி என்பதற்கான வழிகளை ஆதியோகி வழங்கினார். நாம் விருப்பத்துடன் முயற்சித்தால், பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு கதவும் திறக்கும். அன்பும் ஆசிகளும்” எனப் பதிவிட்டுள்ளார்.