Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

மிரட்டல் அரசியல் பாஜவின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக்கிடக்கிறது: அமைச்சர் கோவி.செழியன் பதிலடி

சென்னை: மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.வின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அமைச்சர் கோவி.செழியன் பதிலடி கொடுத்துள்ளார். துணை வேந்தர்களை தமிழக காவல்துறை மிரட்டியதாகப் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்து தமிழ்நாட்டில் காவல்துறை ராஜ்ஜியம் நடக்கிறதா என ஆளுநர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு பதில் அளித்து உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகுதான் தமிழ்நாடு அரசோடு மல்லுக்கட்ட வேண்டும் என்ற ஆத்திரத்தில் ஆளுநர் ரவி துணை வேந்தர்கள் மாநாட்டை கூட்டியிருக்கிறார். உச்ச நீதிமன்ற தீர்ப்பை அறிந்து மாநாட்டை துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள். இதற்கு எப்படி மாநில அரசு பொறுப்பாகும்?. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும் சட்டமும் துணை வேந்தர்களுக்கு தெரிகிறது. ஆனால், எல்லாம் தெரிந்தும் ஆளுநர்தான் வீம்புக்கு அரசியல் செய்கிறார். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு சட்டத்துக்குப் புறம்பாக துணை வேந்தர்கள் மாநாட்டை ஆளுநர் ரவி கூட்டியிருக்கிறார். அதில் பங்கேற்பது சட்டத்திற்கு எதிராக அமையும் எனக் கருதி, துணை வேந்தர்கள் புறக்கணித்திருக்கிறார்கள்.

அமலாக்கத்துறை, சி.பி.ஐ., வருமானவரித் துறை, என்.ஐ.ஏ. போன்ற அதிகார அமைப்புகளை வைத்துதான் ஒன்றிய அரசு எதிர்க்கட்சிகளை மிரட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ்நாடு அரசு எதையும் சட்ட ரீதியாகத்தான் எதிர்கொள்வோம். அப்படித்தான் மசோதாக்கள் விவகாரத்தில் வெற்றி பெற்றோம். தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை எல்லாம் பல மாதங்களாகக் கிடப்பில் போட்ட ஆளுநர் ரவிக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இந்தியா முழுவதும் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்திய வரலாற்றிலேயே முதன் முறையாக மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க குடியரசு தலைவருக்கும் 3 மாதம் காலக்கெடு நிர்ணயித்து உத்தரவிட்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல், குடியரசுத் துணை தலைவரை துணைக்கு அழைத்துக் கொண்டு ஊட்டிக்கு வந்திருக்கிறார் ஆளுநர் ரவி.

“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு போட்ட வழக்கு ராஜ்பவனை தாண்டி ராஷ்டிரபதி பவன் வரை பதம் பார்த்துவிட்டதே! என அடிவயிறு எரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் ரவி கிடப்பில் போட்டு வைத்த மசோதாக்களால்தான் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை விமர்சிக்கிறார் குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர். இவர் மேற்குவங்க ஆளுநராக இருந்த போது முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக நடத்திய அடாவடிகளை இந்த நாடு பார்த்தது. அவர் வழியொற்றி நடக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டிய துணை வேந்தர்கள் மாநாட்டில் ஜெகதீப் தன்கர் கலந்துகொள்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

“மத்திய, மாநில அரசுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்துவது குறித்து ஆராய்வதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி மதன்மோகன் பூஞ்சி கமிஷன் அறிக்கையின்படி, அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது.

ஆனால், மன்மோகன் சிங் அரசோ குஜராத்தில் அரசியல்வாதிகளை மட்டுமல்ல; மாற்றுக் கருத்துகளைக் கொண்ட அரசியல்வாதிகளையும் ஆளுநராக நியமிக்கிறது” எனச் சொன்னவர் யார் தெரியுமா? குஜராத் முதல்வராக இருந்த மோடிதான்! மோடி பிரதமர் ஆன பிறகு பா.ஜ.வுக்குப் பிடிக்காத, அவர்களை எதிர்க்கும் மாநில அரசுகளை ஆளுநர்கள் மூலம்தான் குடைச்சலை கொடுத்து கொண்டிருக்கிறார். அரசியல்வாதிகளை ஆளுநர்களாக நியமிக்கக் கூடாது என சொன்ன மோடியின் அரசுதான், ஆளுநர்களை வைத்து அரசியல் செய்கிறது. பா.ஜ.வைச் சேர்ந்த அரசியல்வாதிகளைத்தான் ஆளுநர்களாக மோடி நியமித்தார்.

மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநராக இருந்தபோதுதான் சசிகலாவை முதலமைச்சர் பதவி ஏற்கவிடாமல் எடப்பாடி பழனிசாமிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பன்னீர்செல்வத்தையும் பழனிசாமியையும் ஒன்றாக கைகோர்த்து இணைத்து வைத்தார். பன்வாரிலால் புரோகித்தையும் ஆர்.என்.ரவியையும் ஆளுநர்களாக நியமித்து தமிழக அரசுக்கு குடைச்சலைக் கொடுத்தார்கள். மிரட்டல் அரசியல் எல்லாம் பா.ஜ.வின் டி.என்.ஏ.வில்தான் ஊறிக் கிடக்கிறது. மிரட்டுவது உங்கள் டி.என்.ஏ.வில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏ.வில் இருக்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார். மிரட்டுவது உங்கள் டி.என்.ஏ.வில் இருக்கலாம்; துணிந்து மாநில உரிமைகளுக்காக எதிர்த்து நிற்பதுதான் எங்கள் டி.என்.ஏ.வில் இருக்கிறது.