சர்வதேச விண்வௌியிலிருந்து பூமிக்கு திரும்பிய சுபான்சு சுக்லா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்: சுபான்சுவின் தந்தை தகவல்
லக்னோ: சர்வதேச விண்வௌி பயணத்தை முடித்து கொண்டு திரும்பிய விண்வௌி வீரர் சுபான்சு சுக்லா இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். ஆக்சியம்-4 விண்வௌி திட்டத்தில் இந்திய விண்வௌி வீரர் சுபான்சு சுக்லா, நாசாவின் முன்னாள் விண்வௌி வீரர் பெக்கி விட்சன், போலந்து விண்வௌி வீரர் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி மற்றும் ஹங்கேரி விண்வௌி வீரர் திபோர் கபு ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் நான்கு பேரும் 18 நாள்கள் விண்வௌியில் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து கடந்த 16ம் தேதி சுபான்சு சுக்லா உள்ளிட்ட நால்வரும் பத்திரமாக கலிபோர்னியாவில் தரையிறங்கினர்.
சுபான்சு சுக்லா தற்போது அமெரிக்காவின் ஹூஸ்டனில் தங்கி உள்ளார். சுபான்சு சுக்லாவின் மனைவி கம்னா சுக்லாவும், அவரது மகனும் ஏற்கனவே ஹூஸ்டனில் தங்கி உள்ளனர். அவர்களை சந்தித்த சுபான்சு சுக்லா இருவரையும் கட்டி, அணைத்து மகிழ்ச்சியை வௌிப்படுத்தினார்.
இதுகுறித்து ஹூஸ்டனில் நிருபர்களிடம் பேசிய கம்னா சுக்லா, “என் கணவர் பத்திரமாக பூமிக்கு திரும்பிவிட்டார். மகனுடன் சென்று அவரை சந்தித்தேன். நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறோம்” என உற்சாகமாக தெரிவித்தார்.
இந்நிலையில் சுபான்சு சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள் நேற்று லக்னோவில் அளித்த பேட்டியில், “மூன்றுவாரங்களாக புவி ஈர்ப்பு விசையற்ற சூழலில் இருந்த சுபான்சு சுக்லாவுக்கு 7 நாள் மறுவாழ்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அவர் மெல்ல, மெல்ல பூமி சூழலுக்கு திரும்பி வருகிறார். நாங்கள் அவருடன் தொலைபேசியில் பேசியபோது, நாட்டுக்கு பெருமை சேர்த்த தருணத்தை நினைத்து மகிழ்ச்சியாக இருப்பதாக சுக்லா தெரிவித்தார்.
சுபான்சுவின் சாதனைக்கு பொதுமக்கள் பெரும் வரவேற்பு அளித்ததை பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளோம். அவரை வரவேற்க நாங்களும், லக்னோ மக்களும் ஆவலுடன் காத்திருக்கிறோம்” என தெரிவித்தார்.
‘அடுத்த விண்வௌி வீரர் இந்திய விண்கலத்தில் பறப்பார்’
ஒன்றிய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறுகையில், “சுபான்சு சுக்லாவின் விண்வௌி பயணம் இந்தியாவின் ககன்யான் உள்ளிட்ட திட்டங்களுக்கான மதிப்புமிக்க நுண்ணறிவையும், அனுபவத்தையும், இந்தியாவின் எதிர்கால விண்வௌி பயணங்களுக்கு ஒரு நிபுணத்துவத்தையும் அளித்துள்ளது. இந்தியாவின் அடுத்த விண்வௌி திட்டம் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டதாக இருக்கும். அடுத்த இந்திய விண்வௌி வீரர் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணிப்பார். இது இந்தியாவின் மதிப்பை உயர்த்துவதுடன், நமது சொந்த விண்வௌி நிலையத்தை அமைப்பது உள்ளிட்ட எதிர்கால திட்டங்களுக்கு சிறந்த வழிவகுக்கும்” என்று கூறினார்.