Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியாவில் தயாரிக்கப்படும் பிரம்மோஸ் ஏவுகணையை வாங்க 17 நாடுகள் ஆர்வம்: பாதுகாப்பு அமைச்சகம் தகவல்

புதுடெல்லி: ஆபரேஷன் சிந்தூரைத் தொடர்ந்து, இந்தியாவின் பிரம்மோஸ் மீயொலி க்ரூஸ் ஏவுகணையின் புகழ் உலகளவில் உச்சத்தை அடைந்துள்ளது. அதனை வாங்க 17 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளன. பஹல்காமில் 26 பேரைக் கொன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஒன்பது தீவிரவாத முகாம்களை, இந்திய-ரஷ்ய கூட்டு முயற்சியில் உருவான பிரம்மோஸ் மீயொலி (சூப்பர்சோனிக்) க்ரூஸ் ஏவுகணைகள் துல்லியமாக அழித்தன. இந்த ஏவுகணை, மாக் 3 வேகத்தில் (மணிக்கு 3,700 கிமீ) பறக்கும் திறனுடன், 290 கிமீ முதல் 800 கிமீ வரை தாக்கக்கூடியது.

மேலும் இதன் தொழில்நுட்பம் மற்றும் குறைந்த ரேடார் கண்டறிதல் தன்மை ஆகியவை உலகளவில் பாராட்டுகளைப் பெற்றுத் தந்துள்ளன. இதன் வெற்றியைத் தொடர்ந்து, 17 நாடுகள் பிரம்மோஸ் மீயொலி (சூப்பர்சோனிக்) க்ரூஸ் ஏவுகணையை வாங்குவதற்கு ஆர்வம் காட்டி, பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குறிப்பாக மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், புரூணை போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகள், பிரம்மோஸை தங்கள் போர் விமானங்கள் மற்றும் கடற்படைக் கப்பல்களில் நிறுவ ஆர்வம் காட்டுகின்றன. பிரேசில், சிலி, அர்ஜென்டினா, வெனிசுலா ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகள் கடற்படை மற்றும் கரையோர பாதுகாப்புக்காக பிரம்மோசை வாங்க ஆர்வம் காட்டி உள்ளன.

எகிப்து, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஓமன் ஆகிய மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் தென்னாப்பிரிக்கா, பல்கேரியா ஆகியவையும் வெவ்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளில் உள்ளன. கடந்த 11ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் புதிய பிரம்மோஸ் உற்பத்தி மையத்தை திறந்து வைத்த பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த ஏவுகணை இந்திய படைகளின் வலிமையையும், எதிரிகளுக்கு எச்சரிக்கையையும், எல்லைகளைப் பாதுகாக்கும் உறுதியையும் வெளிப்படுத்துவதாக பாராட்டினார். தற்போது பிரம்மோஸ் ஏவுகணைகளுக்கு ஏற்பட்டுள்ள உலகளாவிய மவுசு, இந்தியாவின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் முயற்சியை மேலும் வலுப்படுத்துவதுடன், உலகளாவிய பாதுகாப்பு சந்தையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உயர்த்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.