Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலவிருக்கும் 8 மாணவர்களுக்கு மடிக்கணினி : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நாட்டின் தலை சிறந்த உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலவிருக்கும் எட்டு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மடிக்கணினிகளை வழங்கினார். தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலப் பள்ளி மாணவ, மாணவியர்கள் நாட்டின் முன்னணி கல்வி நிலையங்களில் உயர்கல்வி பயிலும் வகையில் “நான் முதல்வன்” திட்டத்தின் கீழ் ஜேஇஇ போன்ற பல்வேறு நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்றிடும் வகையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நுழைவுத் தேர்வுகளில் வெற்றி பெற்று, சென்னை ஐஐடியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளி மாணவர் பார்த்தசாரதி, திருச்சி என்.ஐ.டியில் பயில தேர்ச்சி பெற்றுள்ள சேலம் மாவட்டம், கரியகோவில்வலவு, அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி சுகன்யா, திருச்சி மாவட்டம், சின்ன இலுப்பூர், அரசு உண்டு உறைவிட மேல்நிலை பள்ளி மாணவி ரோகிணி, தமிழ்நாடு தேசிய சட்டப்பல்கலைக்கழகத்தில் பயில தேர்ச்சி பெற்றுள்ள நீலகிரி மாவட்டம் பாலா, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவர் அஜய், தரமணி தேசிய பேஷன் தொழில்நுட்ப நிறுவனத்தில் பயில தேர்ச்சி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், புளியம்பட்டி, ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி மாணவியர் மீனா மற்றும் துர்கா.

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணியார்பாளையம், அரசு உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளி மாணவி பழனியம்மாள் மற்றும் மாணவர் தவமணி, ஆகிய 8 மாணவ, மாணவியர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சென்னை தலைமைச்செயலகத்தில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் மாணவ - மாணவியரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து மடிக்கணினிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியின் போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் லட்சுமி பிரியா, ஆதிதிராவிடர் நல இயக்குநர் ஆனந்த், பழங்குடியினர் நல இயக்குநர் அண்ணாதுரை ஆகியோர் கலந்து உடனிருந்தனர்.