இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல யூடியூபர் கைது: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றினார்
திருவனந்தபுரம்:இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான கோழிக்கோட்டை சேர்ந்த 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி பலாத்காரம் செய்த பிரபல யூடியூபரை போலீசார் மங்களூரு விமான நிலையத்தில் கைது செய்தனர். கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்தவர் முகம்மது சாலி (35). சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான இவர் ஷாலு என்ற பெயரில் 3 யூடியூப் சேனல்களை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோழிக்கோடு அருகே உள்ள கொயிலாண்டி பகுதியை சேர்ந்த 15 வயதான ஒரு பள்ளி மாணவியுடன் இவருக்கு இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப் சாட் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இவர்களுக்கிடையே நெருக்கம் அதிகரித்தது. திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றி அந்த சிறுமியை முகம்மது சாலி பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துள்ளார். இந்த விவரம் அந்த சிறுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் இதுகுறித்து கொயிலாண்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் முகம்மது சாலி மீது போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இதுகுறித்து அறிந்த அவர் துபாய்க்கு தப்பி சென்றார். இதைத்தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்தனர்.
இந்த நிலையில் முகம்மது சாலி நேற்று தாயகம் திரும்புவதற்காக துபாயில் இருந்து விமானம் மூலம் மங்களூரு வருவதாக கொயிலாண்டி போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் விரைந்து சென்று மங்களூரு விமான நிலையத்தில் வைத்து முகம்மது சாலியை கைது செய்தனர். தொடர்ந்து கொயிலாண்டிக்கு அழைத்து வந்த அவரை விசாரணைக்கு பின் போலீசார் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை பிரபல யூடியூபர் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.