Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட அசாம் வாலிபரிடம் விடியவிடிய விசாரணை: 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் நடக்கிறது

சென்னை: கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம், செல்லியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த 4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமி, கடந்த 12ம் தேதி மாலை பள்ளியில் இருந்து தனது பாட்டி வீட்டுக்கு நடந்து சென்றுள்ளார். அப்போது பின்தொடர்ந்த ஒரு வடமாநில வாலிபர், அந்த சிறுமியை தூக்கிச் சென்று, பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பினார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிறகு பொன்னேரி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வடமாநில வாலிபர் குறித்து விசாரித்து வந்தனர். வாலிபரை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்களும் அரசியல் கட்சியினரும் ஆரம்பாக்கம் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடந்த நிலையில், சம்பந்தப்பட்ட வடமாநில வாலிபர் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.5 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேலும் டிஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். மேலும், ஆந்திர மாநிலமான சூலூர்பேட்டை, நெல்லூர், குண்டூர் மற்றும் புறநகர் பகுதி ரயில்களில் தனிப்படை போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், சென்னை சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை நெல்லூர் செல்லும் மின்சார ரயிலில் சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய வடமாநில வாலிபரின் முகஜாடையில் இருப்பவர் கஞ்சா போதையுடன் ஏறுவதை தனிப்படை போலீசார் கண்காணித்தனர்.

அந்த நபருடன் தனிப்படை போலீசார் ரயிலில் பயணம் செய்து, அவரது உருவத்தை செல்போனில் படம்பிடித்து, கும்மிடிப்பூண்டி டிஎஸ்பி ஜெயஸ்ரீக்கு வாட்ஸ்-அப் மூலம் அனுப்பி உறுதி செய்தனர். இதற்கிடையே சூலூர்பேட்டையில் ரயில் நின்றதும், அந்த வாலிபர் கீழே இறங்கி, அங்குள்ள பெட்டிக் கடை அருகே அமர்ந்தபோது, தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து ஆரம்பாக்கம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வந்தனர். இதையறிந்ததும் ஏராளமான கிராம மக்கள் ஆரம்பாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதனால் அந்த வடமாநில வாலிபரை காரில் ஏற்றிச் சென்று, ஆந்திர மாநிலம் ஸ்ரீசிட்டி வழியாக வாலிபர் வேலை செய்த ஓட்டலுக்கு விசாரணை நடத்தச் சென்றனர். அங்கு வைத்து தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் நேபாளத்தைச் சேர்ந்தவர் என்றும், அசாமில் இவரது பெற்றோர் உள்ளனர் என்பதும், ஆந்திர மாநிலம் சூலூர்பேட்டையில் உள்ள ஒரு தாபாவில் வேலை செய்தபடி, கஞ்சா போதையில் ஆரம்பாக்கம், அக்கம்மாபேட்டை உள்பட பல்வேறு பகுதிகளில் சுற்றி வந்து, தனியே செல்லும் சிறுமிகள் மற்றும் இளம்பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

மேலும், இவரது பெயர் ராஜு பிஸ்வகர்மா (35) என்று விசாரணையின்போது, தாபாவில் இவருடன் பணியாற்றியவர்கள் கூறியதாக தெரிகிறது. சம்பவத்தன்று ஆரம்பாக்கம் பகுதியில் ஒரு கர்ப்பிணியை நோட்டமிட்டபடி அவரை பலாத்காரம் செய்வதற்குத்தான் இவன் ஸ்கெட்ச் போட்டுள்ளான். ஆனால் அதற்கு முன்பு சிறுமி சிக்கியதால் சிறுமியை தூக்கிச் சென்று வன்கொடுமை செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விசாரணை முடிந்து கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் வைத்து வாலிபருக்கு உடல் பரிசோதனை செய்யப்பட்டதையடுத்து, அவரை கவரப்பேட்டை காவல்நிலையத்துக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் கூறுகையில், ‘‘கைதான வாலிபரிடம் டிஎஸ்பிக்கள் தலைமையில் விசாரணை நடைபெறும்’’ என்றார்.

இந்நிலையில், கைதான வாலிபரிடம் கும்மிடிப்பூண்டி, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய 3 டிஎஸ்பிக்கள் தலைமையில் நேற்று காலை கவரப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கும்மிடிப்பூண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ வழக்கு உள்பட மேலும் 3 குற்றப்பிரிவுகளின்கீழ் ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

கைதான வாலிபரிடம் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் விடியவிடிய தீவிர விசாரணை நடத்தினர். இதை தொடர்ந்து, நேற்று காலை 3 டிஎஸ்பிக்களின் விசாரணையும் தொடர்ந்து நடக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக இவர் தனது மனைவியை பிரிந்து தனியே வசித்து வருவதும் தெரியந்தது. மேலும், இதுபோன்று வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளாரா, அசாம் மாநிலத்தில் அவர் மீது வேறு ஏதேனும் வழக்கு உள்ளதா என்பது குறித்தும் சென்னை டிஜிபி அலுவலகம் வாயிலாக அசாம் மாநில டிஜிபிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து, சம்பந்தப்பட்ட வாலிபரின் குடும்பத்தினரிடம் அசாம் போலீசார் விசாரித்து வருகின்றனர். இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்று போலீசார் தெரிவித்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்: ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் காலே விஸ்வகர்மா(என்ற) ராஜு பிஸ்வகர்மாவை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மகிளா நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன்னிலையில் ஆஜர் படுத்தினர். 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீசார் அழைத்துச் சென்றனர்.