Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்காவின் 50 சதவீத வரி அமலானது: பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதால் பீதி அடைய வேண்டாம் என ஒன்றிய அரசு தகவல்

வாஷிங்டன்: இந்திய இறக்குமதி பொருட்களுக்கு விதிக்கப்பட்ட அமெரிக்காவின் 50 சதவீத வரி முழுமையாக நேற்று அமலுக்கு வந்தது. இதனால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்படும் என கணிக்கப்படும் சூழலில், பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருப்பதால் பீதி அடைய தேவையில்லை என ஒன்றிய அரசு வட்டாரங்கள் கூறி உள்ளன. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 25 சதவீத பரஸ்பர வரியை விதித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்யாவிடம் இருந்து மோடி அரசு அதிகளவு கச்சா எண்ணெய் வாங்கி கொள்ளை லாபம் சம்பாதிப்பதாக குற்றம்சாட்டி கூடுதலாக 25 சதவீத வரியை விதித்தார்.

இதில், 25 சதவீத பரஸ்பர வரி கடந்த 7ம் தேதி அமலுக்கு வந்த நிலையில், கூடுதல் 25 சதவீத வரி தொடர்பாக ஒப்பந்த பேச்சுவார்த்தை நடத்த 21 நாள் காலஅவகாசம் வழங்கினார். ஆனால், விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், சிறு தொழில் செய்வோரின் நலன்களில் சமரசம் செய்ய முடியாது எனக் கூறிய பிரதமர் மோடி, ‘எங்கள் மீதான அழுத்தம் அதிகரித்தாலும், நாங்கள் அதை தாங்கிக் கொள்வோம்’ என அறிவித்தார். இந்நிலையில், டிரம்ப் விதித்த கூடுதல் 25 சதவீத வரி நேற்று அமலுக்கு வந்தது.

கூடுதல் வரி ஆகஸ்ட் 27ம் தேதி அதிகாலை 12.01 மணிக்கு அமலுக்கு வந்ததாக அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை அறிவித்தது. இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு இனி 50 சதவீதம் வரி செலுத்த வேண்டும். உலகில் எந்த நாட்டிற்கும் இவ்வளவு அதிக வரியை அமெரிக்கா விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு இந்திய வெளியுறவுக் கொள்கையின் தோல்வியை காட்டுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கடுமையாக சாடி உள்ளார்.

அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி அவர்களே, உங்களின் அன்பு நண்பர் ‘ஆப் கி பார் டிரம்ப் சர்கார்’ (இந்த முறையும் டிரம்ப் ஆட்சியே) இன்று முதல் இந்தியா மீது 50 சதவீத வரிகளை விதித்துள்ளார். இந்த வரி விதிப்பால் இந்தியாவில் 10 துறைகளில் மட்டும் ரூ.2.17 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். நமது விவசாயிகள் குறிப்பாக பருத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை பாதுகாக்க எந்த தனிப்பட்ட விலையையும் கொடுக்கத் தயாராக இருப்பதாக நீங்கள் கூறியிருந்தீர்கள். ஆனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க நீங்கள் எதுவும் செய்யவில்லை.

இந்த வரியால் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 1 சதவீதம் பாதிக்கப்படக் கூடும் என்றும், அதன் மூலம் சீனா பயனடையும் என்றும் சர்வதேச வர்த்தக ஆராய்ச்சி அமைப்பு (ஜிடிஆர்ஐ) எச்சரித்துள்ளது. சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உட்பட ஏற்றுமதி சார்ந்த பல முக்கிய துறைகள் பெரும் வேலைவாய்ப்பை இழக்கும் அபாயமும் உள்ளது. இந்திய ஜவுளி ஏற்றுமதி துறையானது நேரடியாக மற்றும் மறைமுகமாக 5 லட்சம் வேலை இழப்புகளை சந்திக்க உள்ளது. ரத்தினக் கற்கள் மற்றும் நகைத் துறையில் 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வேலைகள் ஆபத்தில் இருக்கக்கூடும்.

ஏற்கனவே 10 சதவீத அடிப்படை வரியை அமெரிக்கா கடந்த ஏப்ரல் மாதத்தில் அமல்படுத்தியதில் இருந்து சவுராஷ்டிரா பிராந்தியம் முழுவதும் வைரம் வெட்டுதல் மற்றும் பாலிஷ் செய்வதில் ஈடுபட்டுள்ள சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துவிட்டனர். 5 லட்சம் இறால் விவசாயிகளின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிக்கப்பட்டிருப்பதோடு, 2.5 லட்சம் பேர் மறைமுகமாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் தேச நலனே மிகவும் முக்கியமானது. வலுவான வெளியுறவுக் கொள்கைக்கு திடமும், திறமையும் அவசியம்.

ஆனால், புன்னகை, கட்டி பிடித்தல் மற்றும் செல்பிகள் என்கிற உங்கள் மேலோட்டமான வெளியுறவுக் கொள்கை நாட்டின் நலன்களை பாதித்துள்ளன. நீங்கள் ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை அடைவதில் தோல்வியடைந்தீர்கள். இதன் மூலம் நாட்டை பாதுகாக்கத் தவறிவிட்டீர்கள். இவ்வாறு கார்கே குற்றம்சாட்டி உள்ளார். இதற்கிடையே, ஒன்றிய அரசு தரப்பில் நேற்று வெளியான தகவலில், ‘இந்தியாவின் ஏற்றுமதிகள் பன்முகத்தன்மை கொண்டது என்பதால் அமெரிக்காவின் வரியினால் ஏற்படும் தாக்கம் பயப்படுவதை போல கடுமையாக இருக்க வாய்ப்பில்லை.

மேலும், இந்தியா, அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான கதவுகள் திறந்திருக்கின்றன. வரிப் பிரச்னையை தீர்க்க முயற்சிகள் தொடரும். எனவே ஏற்றுமதியாளர்கள் பீதி அடையத் தேவையில்லை. இந்தியா, அமெரிக்கா இடையேயான நீண்ட கால உறவில் இது ஒரு தற்காலிக சிக்கல் மட்டுமே’ என கூறப்பட்டுள்ளது. இந்தியா தற்போது 220க்கும் மேற்பட்ட நாடுகளுடன் வர்த்தக உறவை கொண்டுள்ளது. இதில், அமெரிக்காவின் 50 சதவீத வரி பாதிப்பை ஈடுகட்ட இங்கிலாந்து, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட 40 முக்கிய நாடுகளுடன் வர்த்தகத்தை பெருக்குவதற்கான முயற்சிகள் எடுக்க முடிவு செய்துள்ளது.

* நிபுணர்கள் கூறுவது என்ன?

தி ஆசியா குழுமத்தின் மூத்த ஆலோசகர் மார்க் லின்ஸ்காட் கூறுகையில், ‘‘அமெரிக்காவின் வரிகளின் குறுகிய கால தாக்கம் சந்தேகத்திற்கு இடமின்றி கடுமையானதாக இருக்கும். பிரதமர் மோடியும், அதிபர் டிரம்பும் நேரடியாக பேசி ஒப்பந்தத்திற்கு வாய்ப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே இதற்கு தீர்வு காண முடியும்’’ என்றார். ஆசிய குழுமத்தின் நிர்வாகத் தலைவர் பசந்த் சங்கேரா கூறுகையில், ‘‘மோடி, டிரம்ப் இடையே நேரடி பேச்சுவார்த்தை நடக்காத வரையிலும் இருதரப்பு வர்த்தக உறவு மந்தநிலையிலேயே இருக்கும். இது இந்தியாவுக்கு மேலும் அதிக சேதத்தை ஏற்படுத்தும் அபாயமும் உள்ளது’’ என்றார்.