Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இடப்பெயர்வு உள்ளிட்ட காரணங்களால் இந்தியாவில் அழியும் நிலையில் 42 மொழிகள்: வரலாற்று ஆய்வாளர்கள் ஆதங்கம்

இந்தியாவில் அழியும் நிலையில் 42 மொழிகள் உள்ளதாக சர்வதேச தாய்மொழி விழிப்புணர்வு நாளையொட்டி ஆய்வாளர்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர். கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) உருதுமொழிக்கு பதிலாக வங்கமொழியை ஆட்சி மொழியாக்க வேண்டும் என்ற அறிவிப்பு 1952ம் ஆண்டு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தாகா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் பலர் உயிர் நீர்த்தனர். அந்த மாணவர்களின் நினைவாக சர்வதேச தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட வேண்டும் என்ற ேகாரிக்கை எழுந்தது.

பல்லாண்டு முயற்சிகளுக்கு பிறகு ஐக்கிய நாடுகள் சபையானது, தனது உறுப்பு நாடுகளை சார்ந்த அனைத்து மக்களின் மொழியையும் பாதுகாக்கும் வகையில் 1999ம் ஆண்டு சர்வதேச தாய்மொழி தினம் என்ற அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பின் படி 2005ம் ஆண்டு முதல் பிப்ரவரி 21ம்தேதி, சர்வதேச தாய்மொழி தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதன்படி இன்று (21ம்தேதி) தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தாய்மொழி தினம் அனுசரிக்கப்பட்டு, அதனை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. தாய்மொழி என்பது ஒரு மழலைக்கு தாயால் பயிற்றுவிக்கப்படும் மொழி. இப்படி தொப்புள் கொடி உறவாய், ெதாடரும் தாய்மொழியானது, ஒவ்வொரு மனிதனுக்கும் விழிக்கு ஒப்பானது. அது மட்டுமன்றி மொழி என்பது ஒரு இனத்தின் நாகரீகம், பண்பாடு, கலாசாரம் என்ற அனைத்தையும் இந்த உலகத்திற்கு எடுத்துரைக்கிறது.

தன்மொழியால் ஒருவர் வெளிப்படுத்தும் கருத்துகளே, அவர்களின் எண்ணத்தையும், தேவைகளையும், சுதந்திரத்தையும், கருத்துகளையும் பிறருக்கு உணர்த்த வழிவகுத்து கொடுக்கிறது. இன்னும் சொல்லப்போனால் விழிகளை இழந்தோர் கூட, தமது தேவைகளை எடுத்துரைத்து, ஆற்றலை வெளிப்படுத்த உதவிகரமாக இருப்பது அவரது தாய்மொழி. இப்படி ஒப்பற்ற பெருமைகள் கொண்ட மொழியை போற்றி பாதுகாக்க ேவண்டியது அனைத்து மக்களுக்கும் அவசியமான ஒன்று. இதனை மறந்ததால் உலகின் பல மொழிகள், தற்போது அழிந்துவிட்டதாக விழிப்புணர்வு நாளில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து மொழிஆய்வு மேம்பாட்டு அமைப்புகளின் முன்னோடிகள் கூறியதாவது:உலகம் முழுவதும் ஆயிரக்கணக்கான மொழிகள் உள்ளது. இதில் தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 22 அட்டவணை மொழிகளும், 100க்கும் மேற்பட்ட அட்டவணை இல்லாத மொழிகளும் உள்ளன.

இந்த மொழிகளையே அதிகளவிலான மக்கள் பேசி வருகின்றனர். அதாவது ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மக்கள் அட்டவணை இல்லாத மொழிகளை பேசிவருகின்றனர். இதுதவிர பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளால் 31 மொழிகள், ஆட்சி மொழிகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்களால் பேசப்பட்டு வரும் 42 மொழிகள், அழியும் நிலையில் உள்ளது. அதாவது இந்த மொழிகளை 10 ஆயிரத்திற்கும் குறைவான மக்களே பேசிவருகின்றனர். இந்த கணக்கீட்டின் படி, இந்த மொழிகள் அழியும் மொழிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் அந்தமான்-நிகோபர் தீவுகளில் பேசப்படும் 11 மொழிகளும், மணிப்பூரில் பேசப்படும் 7 மொழிகளும், இமாசல பிரதேசத்தில் பேசப்படும் 4 மொழிகளும், ஒடிசாவில் பேசப்படும் 3 மொழிகளும் இடம் பெற்றுள்ளன.

தென்மாநிலங்களை பொறுத்தவரை கர்நாடகத்தில் பேசப்படும் குருபா மொழி, ஆந்திரத்தில் பேசப்படும் கடபா, நாயகி மொழிகள், தமிழகத்தில் பேசப்படும் கோடா, தோடர் மொழிகள் அழியும் தருவாயில் இருப்பதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.கடைசியாக நடந்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மொழிகள், அழிந்து வருவதற்கு பிற மொழி கலப்பு, மக்களின் இடம் பெயர்வு, நகரமயமாக்கல் என்று பல்ேவறு காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மொழிகளை அழியாமல் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய மொழிகளுக்கான ஒன்றிய கல்வி நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்தியாவின் முதல் செம்மொழியான தமிழ்

சர்வதேச தாய்மொழி தினத்தில் ஒவ்வொருவரும் அவர்களது தாய்மொழி சிறப்பை அறிந்திருக்க வேண்டியதும் அவசியம். இந்த வகையில் இந்தியாவில் முதன்முதலில் செம்மொழி என்ற அங்கீகாரம் தமிழுக்கு கிடைத்தது நமக்கான பெருமை. கடந்த 2004ம் ஆண்டில் இந்த மாபெரும் கவுரவம் தமிழுக்கு கிடைத்தது. ஒரு மொழியை செம்மொழியாக தேர்வு செய்ய, அதன் இலக்கிய படைப்புகள் வளம் மிகுந்து இருக்க வேண்டும். அந்த மொழியின் ஆதார தோன்றல் என்பது மற்ற மொழிகளை சாராமல் இருக்கவேண்டும். 1000 முதல் 2ஆயிரம் ஆண்டுகள்வரை பழமையானதாக இருக்க வேண்டும். இத்தகையை சிறப்புகள் அனைத்தும் நிறைந்த ஒரே இந்தியமொழி தமிழ் என்பது சர்வதேச தாய்மொழி தினத்தில் நமக்கான தனித்துவம் என்கின்றனர் மூத்த தமிழறிஞர்கள்.

உலகளவில் 40% மொழிகள் அழிவு

கல்வி மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மொழிகள் இன்றியமையாதவை. அறிவு பரிமாற்றம் மற்றும் கலாச்சாரம் பாதுகாப்பதற்கான முதன்மை வழியாகவும் மொழிகள் உள்ளன. தற்போதைய நிலவரப்படி உலகில் 8,324மொழிகள் உள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதில் 40சதவீதம் மொழிகள் அழிவின் பிடியில் உள்ளது. உலகமயமாக்கல் மற்றும் சமூகமாற்றங்கள் தான் இதற்கு முக்கிய காரணம். நகரமயமாக்கல் காரணமாகவும், சமூக சூழல்களாலும் பிறந்த இடத்திலிருந்து வேறு இடத்திற்கு செல்லும் ேபாது, பலநேரங்களில் வேற்றுமொழியை கற்கவும், பேசவும் வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. இந்த வகையில் பல்வேறு இனக்குழுக்கள் ேபசிவந்த தாய்மொழியானது சிதைந்துள்ளது. அதுவே ஒரு கட்டத்தில் அழிவிற்கான அடித்தளத்தையும் அமைத்துள்ளது என்பது உலகாளவிய ஆய்வுகள் தெரிவித்துள்ள தகவல்.

தாய் மொழியில் கல்வி கற்காததும் ஒருகாரணம்

‘‘மனிதர்களின் தாய்மொழி என்பது அவர்களின் பாரம்பரிய அறிவு மற்றும் கலாச்சாரத்திற்கான வழித்தடங்களாக உள்ளன. இந்த வகையில் மொழிகளை பாதுகாத்தால் மட்டுமே பன்மொழி மற்றும் பன்முக கலாச்சாரங்கள் செழித்து வளரும். ஆனால் ஒருவரது மொழியில் பன்முகத்தன்மை நுழைவது அந்த மொழியையே அழித்து விடும் அபாயமாக உருவெடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி உலக மக்கள் தொகையில் 40சதவீதம் பேர், தங்களது தாய்மொழியில் கல்வியை பெறவில்ைல என்பதும் வேதனைக்குரியது. சிலபிராந்தியங்களில் 90சதவீதம் என்ற அளவில் கூட இது உள்ளது. இதன்காரணமாகவும் பலமொழிகள் அழிவின் பிடியில் சிக்கியுள்ளது,’’ என்பதும் ஆய்வாளர்களின் வேதனை.