Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டெஸ்ட் ஓவல் மைதானத்தில் நாளை தொடக்கம்: பும்ராவுக்கு ஓய்வு; ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் களம் இறங்குகின்றனர்

லண்டன்: சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் கொண்ட ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியில் ஆடி வருகிறது. இதில் லீட்சில் நடந்த முதல்டெஸ்ட்டில் இங்கிலாந்தும், பர்மிங்காமில்நடந்த 2வது டெஸ்ட்டில் இந்தியாவும், லார்ட்சில் நடந்த 3வது டெஸ்ட்டில் இங்கிலாந்தும் வெற்றிபெற்றது. மான்செஸ்டரில நடந்த 4வதுடெஸ்ட் டிராவில் முடிந்தது. இதனால் 2-1 என இங்கிலாந்து முன்னிலையில் இருக்கும் நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் லண்டன் தி ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. ரோகித்சர்மா, விராட் கோஹ்லி ஓய்வுபெற்றுவிட்ட நிலையில் இளம்வீரர்களை கொண்டஇந்திய அணி சிறப்பானஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

பேட்டிங்கில் கேப்டன் கில் ஒரு இரட்டை சதம் உள்பட 4 சதத்துடன் 722 ரன் எடுத்து டாப்பில்உள்ளார். கே.எல்.ராகுல் 2 சதம், 2 அரைசதத்துடன் 511, ரிஷப் பன்ட் 2 சதம், 3 அரைசதத்துடன் 479, ஜடேஜா ஒரு சதம், 4 அரைசதத்துடள் 454 ரன் எடுத்து டாப் 4இடத்தில் உள்ளனர். ரிஷப்பன்ட் காயத்தால் விலகியது சற்று பின்னடைவாக இருந்தாலும் துருவ் ஜூரல் அவரின்இடத்தை நிரப்புவார். இவர்களை தவிர ஜெய்ஸ்வால் (291), வாஷிங்டன் சுந்தர் (205) பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

பவுலிங்கில் பும்ரா, சிராஜ் தலா 14, ஆகாஷ் தீப் 11 விக்கெட் எடுத்துள்ளனர். இதனிடையே பும்ரா இந்த டெஸ்ட்டில் ஆடமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் களம் இறங்குகிறார் .மேலும் அன்ஷுல் காம்போஜூக்கு பதிலாக காயத்தில்இருந்து மீண்டுள்ள அர்ஷ்தீப் சிங் அறிமுக வீரராக ஆட உள்ளார். ஷர்துல் தாகூருக்கு பதிலாக குல்தீப் யாதவையும் ஆட வைக்க அணி நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. ஜடேஜா ,வாஷிங்டன் (தலா 7 விக்கெட்) பேட்டிங் மட்டுமின்றி பவுலிங்கிலும் கைகொடுப்பது இந்தியாவுக்கு வலுசேர்க்கிறது. மான்செஸ்டரில் பின்னடைவில் இருந்தாலும் 2வது இன்னிங்சில் சிறப்பான பேட்டிங்கில் டிரா செய்தது இந்தியாவின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது. இதனால் இந்த டெஸ்ட்டில் வெற்றிபெற்று தொடரை சமன் செய்யும் நோக்கில் இந்தியா களம் இறங்குகிறது.

மறுபுறும் இங்கிலாந்து அணி டிரா செய்தாலே தொடரை கைப்பற்றலாம் என்ற நிலையில் களம் காண்கிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ் பவுலிங்கில் 17 விக்கெட் எடுத்து தாப்பில் இருப்பதுடன் , பேட்டிங்கில் 304 ரன் அடித்துள்ளார். விக்கெட் கீப்பர் ஜேமி ஸ்மித் 424, ஜோ ரூட் 403, பென் டக்கெட் 365, ஹாரி புரூக் 317 ரன் எடுத்துள்ளனர். ஒல்லி போப் தனது பங்கிற்கு 257 ரன் எடுத்திருக்கிறார். பவுலிங்கில் கிறிஸ் வோக்ஸ் 10 விக்கெட் எடுத்துள்ளார். ஆர்ச்சர் (9 விக்கெட்) பெரிய அளவில் சாதிக்கவில்லை. மான்செஸ்டரில், மொத்தம் 257 ஓவர்கள் பந்துவீசியதால் பவுலர்கள் சோர்வடைந்தனர். இதனால் இந்த டெஸ்ட்டில் பவுலிங்கில் மாற்றம் இருக்கலாம்.

கில் படைக்கப்போகும் சாதனைகள்..

* தொடரில் இதுவரை 722 ரன் எடுத்துள்ள கில், 5வது டெஸ்ட்டில் ஒருரன் அடித்தால் சேனா நாடுகளில், டெஸ்ட் தொடரில் அதிகரன் எடுத்தவெளிநாட்டு கேப்டன் என்ற சாதனையை படைப்பார். 1966ல், இங்கிலாந்தில், வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் கேரி சோபர்ஸ் 722 ரன் விளாசியதே சாதனையாக இருந்து வருகிறது.

* 11 ரன் அடித்தால் டெஸ்ட் தொடரில் அதிக ரன்கள் சேர்த்த கேப்டன் என்ற சாதனையை படைக்கமுடியும். இதற்கு முன்பாக 1978ல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான கவாஸ்கர் 6 டெஸ்ட்டில் 732 ரன்கள் எடுத்ததே சாதனையாக உள்ளது.

* 31 ரன் எடுத்தால் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் விளாசிய கிரஹாம் கூச் வசம்( 752ரன்) சாதனையை தவிடுபொடியாக்கலாம்.

* 53 ரன் அடித்தால் டெஸ்ட் தொடரில் அதிக ரன் அடித்த இந்திய வீரர் என்ற புதிய சாதனையை படைப்பார். இதற்கு முன்1971ல் வெ.இண்டீசுக்கு எதிராக சுனில் கவாஸ்கர் 774 ரன்களுடன் முதலிடத்தில் இருக்கிறார்.

* 78 ரன் அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் 800 ரன்களை விளாசிய முதல் ஆசிய பேட்ஸ்மேன் என்ற சாதனையை படைக்க முடியும்.

* 89 ரன் அடித்தால் கேப்டனாக ஒரு டெஸ்ட் தொடரில் டான் பிராட்மேன் 810 ரன் விளாசிய சாதனையை தகர்க்கலாம்.

* சதம் அடித்தால் ஒரு டெஸ்ட் தொடரில் 5 சதம் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற முடியும். மேலும் ஓவல் மைதானத்தில் சதம் அடித்தஇந்திய கேப்டன் என்ற சாதனையை படைக்கலாம்.

இதுவரை நேருக்கு நேர்....

இரு அணிகளும் இதுவரை 140 டெஸ்ட்டில் நேருக்கு நேர்மோதி உள்ளன. இதில் 53ல் இங்கிலாந்து, 26ல் இந்தியா வென்றுள்ளன. 51 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது. நாளை 141வது முறையாக சந்திக்கின்றன.

தி ஓவலில் இந்தியா இதுவரை...

லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தியா இதுவரை 15 டெஸ்ட்டில் ஆடி 2 ல் வென்றுள்ளது. 6ல் தோல்வி அடைந்திருக்கிறது. 7 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது கடைசியாக 2021ல் இங்கிலாந்துக்கு எதிராக மோதிய போட்டியில் 157 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிருந்தது. இங்கிலாந்து இங்கு ஒட்டுமொத்தமாக 106 டெஸ்ட்டில் ஆடி 45ல் வெற்றி, 24ல் தோல்வி அடைந்துள்ளது. 37 டெஸ்ட் டிராவில் முடிந்துள்ளது.