* ஆம்ஆத்மி விலகுவதாக தகவல்
புதுடெல்லி: நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடர்பாக இந்தியா கூட்டணி நடத்தும் ஆலோசனை கூட்டத்தில் மம்தா, உத்தவ், அகிலேஷ் போன்ற தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அதே சமயம் ஆம்ஆத்மி பங்கேற்காது எனத் தெரிகிறது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற 21ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனிடையே சுதந்திர தினத்தையொட்டி ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் கூட்டத்தொடர் நடக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மழைக்காலக் கூட்டத்தொடருக்கு முன்னதாக நாளைஅனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறும் என்று ஒன்றிய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜு அறிவித்துள்ளார். அதனால் நாளை அனைத்து கட்சிக் கூட்டம் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெறும்.
இந்த கூட்டத் தொடரில், ஒன்றிய அரசை பல்வேறு முக்கியப் பிரச்னைகளில் மடக்குவதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, மக்களவைத் தேர்தலில் ஓரணியில் செயல்பட்ட ‘இந்தியா’ கூட்டணியின் தலைவர்களுக்கு காங்கிரஸ் கட்சி அவசர அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி இல்லத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறவிருக்கும் இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு திமுக, சமாஜ்வாடி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார்) உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டது.
இருப்பினும், இந்தக் கூட்டத்திற்கான அழைப்பு, ‘இந்தியா’ கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு அனுப்பப்படவில்லை. இது கூட்டணியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக்கூட்டம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், ‘இந்தியா’ கூட்டணி மக்களவைத் தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது’ என்று கூறியுள்ளது ஆம்ஆத்மி கூட்டத்தை புறக்கணிக்கும் என்ற நிலையை உருவாக்கி உள்ளது. இந்தச் சூழலில், ‘இந்தியா’ கூட்டணி கட்சித் தலைவர்களின் நேரடிக் கூட்டத்திற்குப் பதிலாக, காணொலி வாயிலாக (ஆன்லைன்) கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. இதனால் அகிலேஷ் யாதவ், உத்தவ் தாக்கரே உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்பதை உறுதி செய்துள்ளனர்.
அதே போல் இந்தியா கூட்டணி கூட்டத்தை புறக்கணித்து வந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளது. மம்தா பானர்ஜி அல்லது அபிஷேக் பானர்ஜி இதில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த டிரம்ப் கருத்து, பீகார் வாக்காளர்கள் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தம்போன்ற பிரச்னைகளில் நாடாளுமன்றத்தில் ஓரணியில் செயல்படுவது குறித்து இன்று ஆலோசிக்கப்படும்.
இந்தியா கூட்டணியில் ஆம்ஆத்மி இல்லை
ஆம் ஆத்மி கட்சி இனி இந்தியா கூட்டணியில் இல்லை என்று அந்த கட்சியின் எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார். அவர் கூறுகையில்,’ ஆம் ஆத்மி கட்சி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியா கூட்டணி 2024 மக்களவைத் தேர்தலுக்கானது. டெல்லி மற்றும் அரியானா சட்டப்பேரவை தேர்தல்களில் நாங்கள் தனித்துப் போட்டியிட்டோம். பீகார் தேர்தலில் நாங்கள் தனியாகப் போட்டியிடப் போகிறோம். பஞ்சாப் மற்றும் குஜராத்தில் நடந்த இடைத்தேர்தல்களில் நாங்கள் தனியாகவே போட்டியிட்டோம். ஆம் ஆத்மி கட்சி இந்தியா கூட்டணியின் ஒரு பகுதியாக இல்லை. மக்களவையில் பிரச்னைகளை வலுவாக எழுப்புவோம். நாங்கள் எப்போதும் வலுவான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறோம். இதனால் இந்தியா கூட்டணி கட்சிகள் பங்கேற்கும் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்து கொள்ளாது’ என்றார்.