கேரள: தொடர் கோரிக்கைகள் எழுந்த நிலையில், சாகச ஜீப் சவாரிக்கு இடுக்கி மாவட்ட ஆட்சியர் விக்னேஸ்வரி கட்டுப்பாடுகளுடன் அனுமதி அளித்துள்ளார். இடுக்கி மாவட்டத்தில் மூணாறு, மறையூர், வாகமன் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இங்கு வரும் சுற்றுலா பயணிகள், சுற்றுலா இடங்களை கண்டுகளிப்பதுடன் மலைப்பாங்கான பகுதிகளுக்கு ஜீப்களில் சாகச பயணம் செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். இதையொட்டி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சாகச ஜீப் சவாரி நடத்தப்பட்டு வந்தது. ஆனால், ஜீப்களில் சாகச பயணம் செய்யும்போது அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக மாவட்ட ஆட்சியருக்கு புகார்கள் வந்துள்ளது.
இதைத்தொடர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சாகச ஜீப் சவாரி நடத்த ஆட்சியர் விக்னேஸ்வரி தடை விதித்து உத்தரவிட்டார். இதற்கிடையே சாகச ஜீப் சவாரிக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவை ஆட்சியர் வாபஸ் பெற வேண்டும் என்று சாகச ஜீப் பயணம் நடத்துவோர் மற்றும் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள வியாபாரிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, சில கட்டுப்பாடுகளுடன் சாகச ஜீப் பயணம் நடத்துவதற்கு ஆட்சியர் விக்னேஸ்வரி அனுமதி வழங்கியுள்ளார். அதிகாலை 4:00 முதல் மாலை 6:00 மணிக்குள் பயணம் அனுமதிக்கப்படும். விதிமீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.