Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஆணவக்கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் உடல் தகனம்: அமைச்சர்கள், தலைவர்கள் நேரில் அஞ்சலி

நெல்லை: நெல்லையில் ஆணவக் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவின் உடல் அவரது சொந்த ஊரில் நேற்று தகனம் ெசய்யப்பட்டது. அமைச்சர்கள், தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி மாவட்டம் பிரையன்ட் நகரைச் சேர்ந்த சந்திரசேகர், தமிழ்ச்செல்வி தம்பதி மூத்த மகன் கவின் செல்வகணேஷ் (27). இவர் சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் காதல் விவகாரத்தில் கடந்த மாதம் 27ம் தேதி ஆணவ கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக கவின் காதலியான சித்த மருத்துவர் சுபாஷினியின் தம்பி சுர்ஜித், தந்தை எஸ்.ஐ சரவணன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சுர்ஜித்தின் தாயையும் கைது செய்தால் தான் கவினின் உடலை வாங்குவோம் என ஏரலில் 5 நாளாக போராட்டம் நடத்தி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று உடலை பெற்றுக் ெகாள்ள சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, நேற்று காலை கவின் உறவினர்கள் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது கவின் உடலுக்கு அமைச்சர் கே.என்.நேரு, கலெக்டர் சுகுமார், எம்எல்ஏக்கள் பாளை. அப்துல்வஹாப், சங்கரன்கோவில் ராஜா ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கவினின் உடலை பெற்று சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்திற்கு காலை 10.45 மணியளவில் உறவினர்கள் கொண்டு சென்றனர்.

ஆறுமுகமங்கலத்தில் கவின் நெற்றியில் அவரது தாய் முத்தமிட்டு நெஞ்சில் அடித்து கொண்டு கதறி அழுதது காண்போரின் கண்களை கலங்கச் செய்தது. பின்னர் தூத்துக்குடி எம்பி கனிமொழி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கலெக்டர் இளம்பகவத், எஸ்பி ஆல்பர்ட் ஜான், தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்பி சண்முகநாதன், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், பல்வேறு சமுதாய அமைப்பினர் என ஆயிரக்கணக்கானோர் கவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து கவின் செல்வகணேஷ் உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.

* காதலியின் தாயை கைது செய்ய வேண்டும்

கவின் தந்தை சந்திரசேகர் கூறுகையில், ‘என் மகன் சாவிற்கு காரணமான சுர்ஜித் மற்றும் அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அவரது தாய் கிருஷ்ணகுமாரியை கைது செய்திட வேண்டும். இன்ஸ்பெக்டர் காசிப்பாண்டியனையும் டிஸ்மிஸ் செய்து அவர் மீது அரசு நடவடிக்கை எடுத்திட வேண்டும்’ என்றார்

* காதலிக்கு விரைவில் சம்மன்

சென்னை ஐடி ஊழியர் கவின் செல்வகணேஷ் ஆணவக் கொலை வழக்கில் சிபிசிஐடி போலீசார் நேற்று முன்தினம் கொலை நடந்த இடம், அவரது காதலி பணிபுரியும் மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். நேற்று 2வது நாளாக விசாரணையை தொடங்கினர். கவின் காதலியான சித்த மருத்துவர் சுபாஷினி, ‘நானும், கவினும் உண்மையாக காதலித்தோம். எங்களைப் பற்றி எனது அப்பாவுக்கும், அம்மாவுக்கும் தெரியாது. எனது தம்பிதான் கவினுடன் பேசி வந்தார். வீட்டில் எங்களைப்பற்றி சொல்வதற்குள் எல்லாமே நடந்து விட்டது. எனது பெற்றோரை விட்டுவிடுங்கள்’ என வீடியோ வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, டாக்டர் சுபாஷினியிடமும் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் விரைவில் சம்மன் அனுப்ப முடிவு செய்து உள்ளனர்.

* இன்ஸ்பெக்டருக்கு தொடர்பா? போலீஸ் விளக்கம்

நெல்லை மாநகர காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘கொலையுண்ட கவின் செல்சகணேஷின் தந்தை சந்திரசேகர் கொடுத்த பேட்டியில், பாளையங்கோட்டை காவல் ஆய்வாளர் கொலையுண்ட கவின் செல்வகணேஷை கொலை நடைபெறுவதற்கு முன்பாக மிரட்டியதாக தெரிவித்திருந்தார். இது சம்பந்தமாகவும், காதல் விவகாரம் தொடர்பாகவும் எந்தவொரு புகாரும் பாளையங்கோட்டை காவல் நிலையத்திற்கு வரவில்லை. காவல் ஆய்வாளர் காசி பாண்டியன், கொலையுண்ட கவின் செல்வகணேஷிடம் எவ்வித சட்டவிரோத விசாரணையையும் மேற்கொள்ளவில்லை. எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் குறித்து கூறியுள்ள தகவல்கள் உண்மைக்கு புறம்பானது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எஸ்சி, எஸ்டி ஆணையம் விசாரணை

தமிழ்நாடு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் மாநில ஆணைய தலைவர் தமிழ்வாணன் தலைமையிலான குழுவினர் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் நேற்று விசாரணை மேற்கொண்டனர். வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதா? வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள தீர்வு நிதி வழங்கப்பட்டுள்ளதா? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்று கேள்வி எழுப்பினர். கலெக்டர் சுகுமார் மற்றும் போலீஸ் அதிகாரிகள் தகவல்களை அளித்தனர். பின்னர் ஆணைய தலைவர் தமிழ்வாணன் அளித்த பேட்டியில், ‘ஆணவப் படுகொலையை தடுக்க தனி சட்டம் அவசியமாகும். இதற்காக ஆணையம் அரசிடம் அறிவுறுத்தி வருகிறது. எங்கள் விசாரணை முடிவில் அரசுக்கு அறிக்கையில் சில பரிந்துரைகளை வைப்போம்’ என்றார். இதையடுத்து, கவின் வீட்டிற்கு சென்ற தமிழ்வாணன், தாய் தமிழ்ச்செல்விக்கு ஆறுதல் கூறி, அரசு நிவாரண நிதி ரூ.6 லட்சத்துக்கான காசோலையை வழங்கினார்.