Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டி வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் இடிப்பு: ஆந்திராவில் பரபரப்பு

திருமலை: ஆந்திராவில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகம் பொக்லைன் கொண்டு இடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேபள்ளியில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் அலுவலகம் கடந்த 6 மாதங்களாக கட்டப்பட்டு வருகிறது. அரசு நிலத்தில் கட்சி அலுவலகம் கட்டப்படுவதாக அந்த கட்டிடத்தை இடிப்பதற்கான நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்து வந்தனர். சி.ஆர்.டி.ஏ. நடவடிக்கைகளை எதிர்த்து ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. சட்டத்தை மீறி செயல்படக்கூடாது என்று கட்டிடத்தை இடிக்க தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்தது. உயர்நீதிமன்ற உத்தரவை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வழக்கறிஞர் சி.ஆர்.டி.ஏ. கமிஷனரிடம் தெரிவித்தார். ஆனால் அதனை மீறி நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இடிக்கும் பணி தொடங்கியது. இதற்காக அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் பொக்லைன், ஜேசிபி கொண்டு வந்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்டிடம் இடிக்கப்பட்டது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தாடேப்பள்ளியில் 2 ஏக்கர் பாசன நிலத்தை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட ஆட்சி அதிகாரத்துடன் ஜெகன்மோகன் நிலத்தை ஒதுக்கினார். இதில் 2 ஏக்கரில் கட்டிடங்கள் கட்டி, மீதமுள்ள 15 ஏக்கரையும் சுத்தப்படுத்தி ஆக்கிரமிக்க திட்டமிட்டதாக கூறப்படுகிறது. இந்த புகாரின்படி சட்ட விரோத கட்டுமானங்களை இடித்து ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆக்கிரமித்துள்ள பாசன நிலத்தை கையகப்படுத்துகிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

* புதிய சபாநாயகர் தேர்வு: ஜெகன் புறக்கணிப்பு

ஆந்திர மாநிலத்தின் 16வது சட்டப்பேரவையின் சபாநாயகராக சிந்தகயலா அய்யண்ணப்த்ருடு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இவரது பதவியேற்பு விழாவை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி புறக்கணித்தார். இந்தவிழாவில் ஜெகன்மோகன் உள்பட அக்கட்சி எம்.எல்.ஏக்கள் யாரும் பங்கேற்கவில்லை.

* விசாகப்பட்டினம் அலுவலகத்திற்கும் நோட்டீஸ்

விசாகப்பட்டினம் நகரின் எண்டாடா கிராமத்தில் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டு வந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு மாநகராட்சி அதிகாரிகள் நோட்டீஸ் ஒட்டினர். இந்த நோட்டீசை முன்னாள் அமைச்சர் கிழித்தெறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அந்த அலுவலகத்தையும் அதிகாரிகள் இடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

* சர்வாதிகாரி போல நடக்கிறார் சந்திரபாபுநாயுடு: ஜெகன்மோகன்

முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பதிவில்,’ ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து தொடர்ந்து ஒய்எஸ்ஆர் கட்சியினர் மீது தாக்குதல் நடத்தி, வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு சர்வாதிகாரியைப்போல சந்திரபாபுநாயுடு பழிவாங்கும் அரசியலை நடத்தி வருகிறார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் அலுவலக பணிகள் கிட்டத்தட்ட முடிந்து விட்டன. இருப்பினும் உயர்நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்து, கட்சி அலுவலகத்தை இடித்துள்ளனர். இதன் மூலமாகவே இந்த ஆட்சி எவ்வாறு இருக்கும் என தெரியவருகிறது. இதுகுறித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும். பழிவாங்கும் அரசியலை கண்டு எதிர்கட்சிகள் பயப்படாது. ஜனநாயகத்தை காப்பாற்ற அனைவரும் ஒன்று சேர வேண்டும்’ என்று பதிவிட்டுள்ளார்.

* எல்லாம் சட்டப்படிதான் நடக்கிறது; தெலுங்குதேசம்

தெலுங்கு தேசம் கட்சி தலைவர் பட்டாபி ராம் கொம்மாரெட்டி கூறுகையில், ‘ சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள விதிகளின்படி, எந்தவொரு சட்டவிரோத கட்டுமானமும் இடிக்கப்பட வேண்டும். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அலுவலகம், சம்பந்தப்பட்ட துறைகளிடம் அனுமதி பெறாமல், விதிகளின்படி இடிக்கப்படுகிறது’ என்றார்.