Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வெடிகுண்டு பீதியில் தூக்கி வீசிய குடத்தில் தங்கம், வெள்ளி பொருட்கள்: கேரளாவில் பரபரப்பு

திருவனந்தபுரம்: கண்ணூர் அருகே தொழிலாளர்கள் சிலர் பள்ளம் தோண்டியபோது மண்ணுக்குள் இருந்து குடம் ஒன்று கிடைத்தது. அதில் வெடிகுண்டு இருக்கலாம் எனக் கருதி தூக்கி வீசியபோது அதில் இருந்து தங்கம், வெள்ளி உள்ளிட்ட பொருட்கள் கிடைத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் பகுதி அரசியல் கலவரங்களுக்கு பெயர் பெற்ற பகுதியாகும். சிபிஎம், பாஜ, காங்கிரஸ் உள்பட அரசியல் கட்சித் தொண்டர்கள் சிலநேரங்களில் வெடிகுண்டு வீசியும், ஆட்களை வெட்டியும் அடிக்கடி பயங்கர மோதலில் ஈடுபடுவது வழக்கம். சமீபத்தில் கண்ணூர் அருகே உள்ள பானூரில் குண்டு தயாரிக்கும்போது சிபிஎம் தொண்டர் ஒருவர் பலியானது பரபரப்பை ஏற்படுத்தியது. குண்டுகளை தயாரிக்கும் அரசியல் கட்சியினர் அதை ஆள் நடமாட்டமில்லாத இடங்களில் பதுக்கி வைக்கின்றனர்.

இந்தப் பகுதிகளுக்கு தவறுதலாக செல்பவர்கள் அது வெடிகுண்டு என தெரியாமல் எடுத்து பார்க்கும்போது வெடித்து சிதறி பலியான சம்பவமும் நடக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பானூர் பகுதியில் கீழே விழுந்து கிடந்த தேங்காய்களை எடுக்கச் சென்ற ஒரு முதியவர் தேங்காய் என நினைத்து எடுத்தபோது குண்டு வெடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சமீப காலமாக கண்ணூரில் ஆள் நடமாட்டமில்லாத பகுதியில் ஏதாவது ஒரு பொருள் கிடந்தால் யாரும் அதன் அருகே கூட செல்வது கிடையாது. இந்நிலையில் நேற்று கண்ணூர் அருகே செங்களாயி பகுதியிலுள்ள ஒரு ரப்பர் தோட்டத்தில் தொழில் உறுதித்திட்ட பெண்கள் மழைநீரை தேக்குவதற்காக குழிகளை வெட்டிக்கொண்டிருந்தனர்.

அப்போது பூமிக்கு அடியில் இருந்து ஒரு பழங்கால குடம் கிடைத்தது. அதைப் பார்த்த அனைவருக்கும் அது வெடிகுண்டாக இருக்கலாமோ என்று பயம் ஏற்பட்டது. இதனால் அங்கிருந்தவர்கள் ஓட்டம்பிடித்தனர். ஆனால் தைரியமாக ஒருவர் அதை எடுத்து தூக்கி வீசினார். இருப்பினும் வெடிப்பதற்கு பதிலாக அந்தக் குடம் இரண்டாக உடைந்தது. அதற்குள் வெடிகுண்டுக்கு பதிலாக ஏராளமான தங்கப் பதக்கங்கள், முத்துமணி, கம்மல், வெள்ளி நாணயங்கள் இருந்தன. அப்போதுதான் அது ஒரு புதையல் என்று அவர்களுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவர்கள் உடனடியாக செங்களாயி பஞ்சாயத்துக்கு தகவல் தெரிவித்தனர். பஞ்சாயத்து அதிகாரிகள் தளிப்பறம்பு போலீசுக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் விரைந்துவந்து பொருட்களை கைப்பற்றி தளிப்பறம்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். அது புதையல் தானா என்பது குறித்து ஆய்வு நடத்த தொல்பொருள் துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.