முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு எதிரான வழக்கு; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பாத இன்ஸ்பெக்டர்கள் நேரில் ஆஜராக வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை: முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு எதிரான வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த சம்மனை, குறித்த காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு வழங்காத பாளையங்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர்களை ஜூலை 30ம் தேதி நேரில் ஆஜராகுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை சிஎஸ்ஐ திருமண்டல அலுவலகத்துக்குச் சென்ற இட்டேரி பகுதியைச் சேர்ந்த மதபோதகர் காட்ஃப்ரே நோபிள் என்பவரை, கடந்த 2023ம் ஆண்டு ஜூன் 26ம் தேதி, திருநெல்வேலி மக்களவைத் தொகுதி முன்னாள் எம்.பி. ஞானதிரவியத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பாக காட்ஃப்ரே நோபிள் அளித்த புகாரின் அடிப்படையில், ஞானதிரவியம் உள்பட 33 பேர் மீது பாளையங்கோட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க திருநெல்வேலி நீதிமன்றத்திற்கு உத்தரவிட கோரி புகார்தாரான காட்ஃப்ரே நோபிள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், முன்னாள் எம்பி ஞான திரவியத்திற்கு நீதிமன்றம் அனுப்பிய சம்மனை வழங்காதது குறித்து கேள்வி எழுப்பி, அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல் துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஜூலை 21ம் தேதி நீதிமன்ற சம்மன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பிறகு தான் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யவும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், சம்மன் அனுப்பவும், வழக்கை முடிக்கவும் கோரி மக்கள் உயர்நீதிமன்றத்தை நாட வேண்டியுள்ளது. நீதிமன்ற உத்தரவு பெற்று தான் வழக்கை முடிக்க வேண்டுமானால் காவல் துறை எதற்கு?. வழக்கு விசாரணை ஜூலை 30ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்றைய தினம், 2024 நவம்பர் முதல் 2025 ஜூலை 21ம் தேதி வரை பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.