பூமி வெப்பமயமாதல் விவகாரத்தில் சர்வதேச நீதிமன்றம் எச்சரிக்கை: உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
நியூயார்க்: பூமி வெப்பமயமாதல் பிரச்சனையில் உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க தவறினால் சர்வதேச சட்டத்தை மீறியதாகவே கருதப்படும் என ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றம் எச்சரித்துள்ளது. பூமி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுதல், கடல் மட்டும் உயர்வு, பருவம் தப்பிய மழை இயல்புக்கு மாறான அதிக மழை மற்றும் வெயில் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகி வருகின்றன.
கடல் மட்டம் உயர்வதால் தங்கள் நாடு மூழ்கடிக்கப்படலாம் என்ற அச்சத்தில் உள்ள மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு தீவு நாடுகள் நெதர்லாந்தின், தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா.வின் சர்வதேச நீதிமன்றத்தில் புவி வெப்பமயமாதலுக்கு எதிரான மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் பல்லாயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ சமர்ப்பிப்புகளை நீதிபதிகள் ஆராயந்ததுடன் கடந்த இரண்டு வாரங்களாக நேரடி வாதங்களையும் கேட்டனர்.
இதுகுறித்து நேற்று கருத்தை தெரிவித்த தலைமை நீதிபதி யூஜி, பசுமை இல்ல வாயு வெளியேற்றம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி மனித நடவடிக்கைகளால் தான் ஏற்படுகிறது என்று கூறினார். மேலும் காலநிலை மாற்றத்தின் விளைவுகள் கடுமையானவை என்றும், நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்த கூடியவை என்றும் கூறிய நீதிபதி, அவை சுற்றுசூழல் மற்றும் மக்கள் தொகையை தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
இதனை உடனடியாக கவனிக்க வேண்டியது அவசியம் என்று சுட்டிக்காட்டியுள்ள அவர் காலநிலை மாற்றம் விவகாரத்தில் பல நாடுகளுக்கு முக்கிய கடமைகள் உள்ளன என்றும், அவற்றை பின்பற்ற தவறுவது சர்வதேச சட்டத்தை மீறுவதாகவும் என்று கூறினார். இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை நடத்தப்பட்டு சுற்றுசூழலை மாசு படுத்துபவர்களுக்கு கடுமையான புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.