மதுரை: 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த நாச்சியம்மாள் என்பவர் ஐகோர்ட் மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு இன்று ஐகோர்ட் கிளையில் விசாரணைக்கு வந்தது. அதில் காவல்துறையினர் முறையாக நடவடிக்கை எடுக்கவில்லை; எனது மகளை கண்டுபிடித்து ஆஜர்ப்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி 15 வயது சிறுமி காணாமல்போன புகாரில் காவல் ஆய்வாளர் நடவடிக்கை எடுக்காமல் தான் தோன்றித்தமான நடந்துள்ளார். 15 வயது சிறுமி காணாமல் போன விவகாரத்தில் காவல்துறை முறையான சட்டரீதியான நடவடிக்கை பின்பற்றவில்லை. சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மனுதாரர் தந்த புகாரில் உடனே வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணையிட்டது. மேலும் சிறுமியை குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைத்து, மருத்துவ பரிசோதனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.