சென்னை: நாளை பொது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எந்த வித பாதிப்பும் இல்லாமல் அரசு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் எவ்வித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்குவது குறித்து அனைத்து போக்குவரத்து மேலாண் இயக்குனர்களுக்கு போக்குவரத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பனிந்திர ரெட்டி அறிவுரை வழங்கி உள்ளார். அதன்படி தினசரி கால அட்டவணையின்படி எந்தவித பாதிப்பும் இல்லாமல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பேருந்துகளை பணிமனைக்கு உள்ளே தான் நிறுத்தி வைக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.
பேருந்துகள் இயக்கப்படுவதை தடுத்தால் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் பேருந்துகள் இயக்கம் தொடர்பான தகவல்களை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை அறிக்கையாக அனுப்ப வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். பேருந்துகளை இயக்குவதற்கான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்த அவர் மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் பேருந்து வழித்தடத்தில் கூடுதல் கவன, செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார். போக்குவரத்து கோட்ட அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைக்கு அதிகாரியை நியமித்து பேருந்து இயக்கத்தை கண்காணிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடத்தில் பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதை மேலாண் இயக்குனர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.


