மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையத்தில் நேற்றிரவு பழைய வாகன கழிவு குப்பையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்-சிறுமுகை சாலையில் எல்ஐசி பின்புறம், சங்கர் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பழைய இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளது. இங்கு பழைய வாகனங்கள் உடைக்கப்பட்டு அதில் தேவையான பாகங்களை எடுத்து வைத்துக் கொண்டு மற்றவை விற்பனைக்காக வைக்கப்படுகின்றன. இங்கு சேகரமாகும் வாகனங்களின் கழிவுகள் சங்கர் நகர் பகுதியில் உள்ள குப்பைகளில் மொத்தமாக கொட்டப்படுகின்றன.
இந்த நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் திடீரென கழிவு குப்பையில் இருந்து லேசாக புகை வந்தது. சிறிது நேரத்தில் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பரவியது. தீயில் அங்கு கொட்டப்பட்டு இருந்த பிளாஸ்டிக் மற்றும் ரெக்சின் பொருட்கள் எரிய துவங்கியது. இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து புகை மண்டலமாக காட்சியளித்தது. தகவலறிந்து சம்பவயிடத்துக்கு மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் அணில் குமார் தலைமையில் இரு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. எனினும், இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் இரவு நேரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.