Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி திருவாதிரை விழா ராஜேந்திர சோழன் நினைவு நாணயம் பிரதமர் மோடி வெளியிடுகிறார்: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி நடைபெறும் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று ராஜேந்திர சோழனின் நினைவு நாணயத்தை வெளியிடுகிறார். தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு 8 முறை படையெடுத்து வந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். ஆனால், ஒரு இடத்தில்கூட வெற்றி பெறாமல் பாஜ படுதோல்வி அடைந்தது. இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வருவதை பிரதமர் மோடி தவிர்த்து வந்தார். இந்நிலையில் சட்டப்பேரவை பொது தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்களே உள்ளன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா வந்து அதிமுகவுடன் கூட்டணியை இறுதி செய்துள்ளார்.

மேலும் மதுரையில் நடந்த பாஜ நிகழ்ச்சியிலும் அமித்ஷா பங்கேற்றார். ஆனால், பிரதமர் மோடி இதுவரை தமிழ்நாட்டுக்கு வரவில்லை. அதேசமயம் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் மாவட்டங்கள் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார். அதேபோல் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து பிரதமர் மோடியும் இப்போதே தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்து சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடிவு செய்துள்ளார். அந்த வகையில் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில் வரும் 27ம் தேதி கோயிலை கட்டிய ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, ஆடித் திருவாதிரை விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.

இதுகுறித்து பா.ஜ வட்டாரங்கள் கூறுகையில், கேரளாவில் வரும் 26ம் தேதி நடைபெறும் அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்று விட்டு, அங்கிருந்து தமிழகத்திற்கு வருகை தருகிறார். அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் வரும் 27ம் தேதி தொல்லியல் துறை சார்பில் நடைபெறும் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த விழா, ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரம் கோயிலை கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா ஆகிய முப்பெரும் விழாவாக நடைபெற இருக்கிறது.

விழாவில், ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார். இசையமைப்பாளர் இளைய ராஜாவின் இசை நிகழ்ச்சியும் நடக்கிறது. மேலும், பல்வேறு தலைவர்களும் பங்கேற்க இருக்கின்றனர். பிரதமர் மோடி வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என்றனர். இந்த விழா அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருவதால், முதல்வர் மு.க.ஸ்டாலினும் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரியலூரில் நடைபெறும் விழாவில் பங்கேற்றுவிட்டு, தஞ்சாவூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடக்கும் நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது. மறுநாள் (28ம் தேதி) தூத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.