Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கங்கை கொண்டவன் என்பதால் கங்கை நதிக்கரையில் ராஜேந்திர சோழனுக்கு சிலை: டெல்லி விமான நிலையம் முன்பு ராஜராஜ சோழனுக்கு சிலை; தமிழ் ஆர்வலர்கள் கோரிக்கை

சென்னை: ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், தமிழ் நிலத்தை புலிக் கொடியுடன் ஒரு பேரரசன் ஆண்டான். அவன் பெயர், வரலாற்றின் பக்கங்களில் பொறிக்கப்பட்டிருந்தாலும், அவனது உண்மையான பிரம்மாண்டம் பலரால் அறியப்படவில்லை. நாடே அறிந்த, உலகமே அறிந்த ஒரு மாபெரும் சக்தியாக உருவெடுத்தவன் ராஜேந்திர சோழன். தஞ்சை பெரிய கோயிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன். தந்தையின் போர்க்களங்களில், இளவரசனாகவே தன் வீரத்தை நிரூபித்தவன். தந்தையின் வெற்றிகளுக்குப் பின்னால் ஒரு பெரும் புயலாக மறைந்திருந்தான் ராஜேந்திரன். அவை கடல்களைத் தாண்டி, கண்டங்களை வெல்லத் துடித்தன.

1014ம் ஆண்டு, சோழப் பேரரசின் மணிமகுடம் ராஜேந்திரனுக்குச் சூட்டப்பட்டது. அப்போதுதான், சரித்திரம் காணாத ஒரு சகாப்தம் தொடங்கியது. தன் தந்தை வட இலங்கையை மட்டுமே வென்றிருந்தார். ஆனால் ராஜேந்திரனோ, முழு இலங்கையையும் தன் காலடியில் கொண்டு வந்தான். அவனது பார்வை தெற்கோடு நிற்கவில்லை. வடக்கை நோக்கித் திரும்பியது. கங்கை நதியை நோக்கி ஒரு மாபெரும் படையை அனுப்பினான். வடக்கே கோலோச்சிய மன்னன் மகிபாலனைத் தோற்கடித்து, புனித கங்கையின் நீரைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்தான்.

அந்த வெற்றிக்குச் சான்றாக, கங்கை கொண்ட சோழன் என்ற பட்டத்தைச் சூடிக்கொண்டான். கங்கை கொண்ட சோழபுரம் என்ற ஒரு புதிய தலைநகரையே உருவாக்கினான். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரு மன்னன் தன் பெரும் படையை கடல் கடந்து அயல்நாடுகளுக்கு அனுப்பினான். சோழர்களின் கப்பற்படை, சீறும் அலைகளைக் கிழித்துக்கொண்டு மலேசியா, இந்தோனேசியா, சுமத்ரா தீவுகளை நோக்கிப் பாய்ந்தது. கடாரம் என்றழைக்கப்பட்ட இன்றைய மலேசியப் பகுதியை வென்று, கடாரம் கொண்டான் என சரித்திரத்தில் நிலைபெற்றான்.

அவனது கடற்படை, இந்தியப் பெருங்கடலையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது. கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே நடந்த வர்த்தகத்தின் கடிவாளம், சோழர்களின் கைகளில் வந்தது. ராஜேந்திர சோழன், ஒரு மாபெரும் வீரன் மட்டுமல்ல; அவன் ஒரு ராஜதந்திரி, ஒரு தொலைநோக்குப் பார்வையாளன். அவனது ஆட்சியில், சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைந்தது. இன்று நாம் காணும் பல நாடுகள், அன்று அவனது காலடியில் இருந்தன. அவன் வெறும் ஒரு மன்னன் அல்ல. அவன் ஒரு பேரரசன். தமிழ் இனத்தின் பெருமையை உலகறியச் செய்தவன். கடல்களை ஆண்டவன். கங்கையை வென்றவன். ராஜேந்திர சோழனின் கதை, வெறும் வீரக்கதை அல்ல. அது, ஒவ்வொரு தமிழனும் மெய்சிலிர்த்து நினைவுகூர வேண்டிய ஒரு மாபெரும் வரலாறு.

இந்த நிலையில் கங்கை கொண்ட சோழபுரம் வந்த பிரதமர் மோடி பேசும் போது, ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரம் கோயிலை கட்டியபோது, அதன் சிகரத்தை தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலை விட சிறியதாக வைத்திருந்தார் என்பது நாம் அனைவரும் அறிவோம். தனது தந்தை கட்டிய கோயிலை மிக உயரமாக வைத்திருக்க விரும்பினார். நமது பாரம்பரியத்தின் மீதான பெருமையை முன்னெடுத்துச் செல்லும் வகையில், வரும் காலங்களில் ராஜராஜ சோழன் மற்றும் அவரது மகனும் சிறந்த ஆட்சியாளருமான முதலாம் ராஜேந்திர சோழனின் பிரமாண்டமான சிலைகளை தமிழ்நாட்டில் நிறுவுவோம் என்றார்.

பிரதமரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு விதமான விவாதங்கள் எழுந்துள்ளது. தமிழனின் அடையாளத்தை உலகத்தில் உள்ள அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் ராஜ ராஜ சோழனின் சிலையை இந்தியாவின் தலைநகரான டெல்லியில் வைக்கப்படும் என்று அறிவிக்காதது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது. அதே போல புனித கங்கையின் நீரைத் தமிழ் மண்ணுக்குக் கொண்டு வந்தான் ராஜேந்திர சோழன் என்பது வரலாறு. அதனால், தான் பிரதமர் மோடி கங்கை நதியில் இருந்து புனித நீரை கங்கை கொண்டபுரத்திற்கு கொண்டு வந்தார். அப்படியிருக்கும் போது அவரது சிலையை கங்கை நதிக்கரையில் நிறுவியிருக்க வேண்டும் என்பதும் தமிழர்களின் கோரிக்கையாக எழுந்துள்ளது. எப்படி சர்தார் வல்லபாய் படேலுக்கு ரூ.3,000 கோடி செலவில் குஜராத்தில் நர்மதா ஆற்றின் குறுக்கே சிலை அமைக்கப்பட்டது. அதே போல ராஜேந்திர சோழனுக்கும் சிலை அமைக்க வேண்டும் என்றும் தமிழக மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

* இதுகுறித்து திராவிட இயக்க சொற்பொழிவாளர் நாஞ்சில் சம்பத் கூறியதாவது: பிரதமர் மோடி ராஜேந்திர சோழன் இந்தியாவின் அடையாளம் என்று குறிப்பிட்டார். ராஜேந்திர சோழன் தமிழர்களின் அடையாளம். அவன் கங்கை கொண்டவன். கடாரம் வென்றவன். கடலில் நாவாய் செலுத்துபவன், கடலை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த பேரரசன். இந்தியாவின் அடையாளம் என்றும், சோழர்களுடைய பெருமையையும் பேசிய நாடாளும் பிரதமர், ராஜேந்திரனின் பெருமையை, ராஜராஜ சோழனின் பெருமையை உலகம் அறிய வேண்டுமானால் சர்வதேச நாடுகளில் இருக்கும் அதிபர்கள் வந்து போகின்ற இந்தியாவின் தலைநகர் டெல்லி விமானநிலையம் முன்பு வைக்க வேண்டும்.

டெல்லியில் வைப்பாரா என்பதை தமிழர்கள் நாங்கள் எங்குகிறோம் என்பதை பிரதமரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன். கங்கை பகுதியை வென்றதால், ராஜேந்திர சோழனுக்கு கங்கை நதியில் பிரமாண்ட சிலை வைக்க வேண்டும். படேல் சிலை போல ராஜேந்திரனுக்கு கங்கை நதியில் வைக்க வேண்டும். அதை பிரதமர் செய்வாரா? அங்கிருந்து நீர் மட்டும் எடுத்து வந்தால் போதுமா? காந்தி சிலையை நாடு முழுவதும் வைத்ததால், நாடு முழுவதும் பின்வரும் சந்ததிகள் தெரிந்து கொள்கின்றனர். அதேபோல, வட இந்தியா முழுவதும் சிலை வைத்தால், அங்கு உள்ளவர்கள், ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனின் வரலாற்றை தெரிந்து கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.