ஆக.27ல் விநாயகர் சதுர்த்தி விழா: பெரம்பலூர், கரூர், திருச்சியில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரம்
பாடாலூர்: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பெரம்பலூர், திருச்சி, கரூர் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா இந்துக்களால் கோலாகலமாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகையாகும். ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவிற்காக அனைத்து பகுதிகளிலும் பொதுமக்கள் விரதம் இருந்து 2 அடி முதல் 12 அடி வரை பல விதமான விநாயகர் சிலைகளை முக்கிய இடங்கள், வீடுகளில் வைத்து 3 நாள் சிறப்பு வழிபாடுகள் நடத்தி மூன்றாம் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்து சென்று அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறு, கடல் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைப்பார்கள்.
இந்த ஆண்டு ஆகஸ்ட் 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா வருகிறது. இதற்காக விநாயகர் சிலைகள் பல இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரம்பலூர், கரூர், திருச்சி மாவட்டங்களில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சிலை தயாரிப்பாளர்கள் விதவிதமான விநாயகர் சிலைகளை வடிவமைத்து, வர்ணத் பூசி, சதுர்த்தி விழாவுக்காக தயார் செய்து வருகின்றனர். சிலைகள் மாவு, களிமண் மற்றும் பல்வேறு வண்ணங்களை பயன்படுத்தி செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் கேட் பகுதியில் விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்கு 2 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு உள்ளது. பரமசிவன்-பார்வதி ஆகியோருடன், பல்வேறு வாகனங்களில், சிங்கத்தின் மீது விநாயகர் என்று விதவிதமாக விநாயகர் சிலைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து விநாயகர் சிலைகளுக்கான பாகங்கள் தனித்தனியாக ஆங்காங்கே தயாரிக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர்கேட் பகுதிக்கு வரவழைக்கப்படுகின்றன.
பின்னர் இங்கு அவற்றை நேர்த்தியாக பொருத்தி, சிலைகள் செய்யப்பட்டு வர்ணம் பூசப்பட்டு முழு வடிவம் கொடுக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகளின் விலை ரூ.3,500 முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தேவைக்கு ஏற்ப வாடிக்கையாளர்கள் விநாயகர் சிலைகளின் வடிவமைப்பை பார்த்து ஆர்டர் கொடுத்து செல்கின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் ஒரு மாதத்திற்கு மேலான நாட்கள் உள்ள நிலையில் தற்போதே விநாயகர் சிலைக்கு ஆர்டர்கள் குவிந்து வருவதால், கைவினை கலைஞர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
விநாயகர் சதுர்த்தி முடிந்து நவராத்திரி வருவதால் கொலு பொம்மைகள் தயாரிக்கும் பணியிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். கரூர் மாவட்டம் திருச்சி-கரூர் மணப்பாறை சாலையில் உள்ள மயிலாடி பகுதியில் விநாயகர் சிலைகள் இரண்டரை அடி முதல் 10 அடி வரை தயாரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் திருச்சி கொண்டையம்பேட்டை பகுதிகளில் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.