திருவண்ணாமலையில் ஆனி மாத பவுர்ணமி; 2வது நாளாக பக்தர்கள் விடிய விடிய கிரிவலம்: 4 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை: ஆனி மாத பவுர்ணமியொட்டி இன்று 2வது நாளாக லட்சக்கணக்கான பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் வந்தனர். கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால் சுமார் 4 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆனி மாத பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 2.33 மணிக்கு தொடங்கி, இன்று அதிகாலை 3.08 மணி வரை என அறிவிக்கப்பட்டது. அதன்படி அண்ணாமலையார் கோயிலில் நேற்று தரிசனம் செய்த பக்தர்கள் கிரிவலம் வந்தனர். இதைத்தொடர்ந்து விடிய விடிய இன்று காலையும் லட்சகணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர். நடை அடைப்பு இல்லாமல், இரவு 10 மணி வரை தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுரம் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இன்று காலை சுவாமியை தரிசிக்க பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் சுவாமியை தரிசிக்க சுமார் 4 மணி நேரமானது.
பவுர்ணமியொட்டி பக்தர்களின் வசதிக்காக 1,200 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேபோல், திருவண்ணாமலை-தாம்பரம் இடையே விழுப்புரம், திண்டிவனம், மதுராந்தகம் வழியாக பவுர்ணமி சிறப்பு ரயில், வேலூர், காட்பாடி வழியாக திருவண்ணாமலை-சென்னை பீச் ஸ்டேஷன் ரயில் இயக்கப்பட்டது. இன்று காலை கிரிவலம் முடித்த பக்தர்கள் தங்கள் ஊர்களுக்கு பஸ், ரயில்களில் முண்டியடித்து ஏறி பயணம் செய்தனர். இன்று அதிகாலையுடன் பவுர்ணமி நிறைவு பெற்றதால் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்தது.