சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை கைது செய்தது எப்படி என்பது குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் அளித்துள்ளார். சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள கலந்தாய்வு கூடத்தில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் சங்கர் ஜிவால் இன்று செய்தியாளர்களை சந்திப்பில் கூறியதாவது;
நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்த பயங்கரவாதிகளை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசார் கடந்த வாரம் கைது செய்தனர். அபுபக்கர் சித்திக், முகமது அலி உள்ளிட்ட 3 பேரை தமிழ்நாடு தீவிரவாத தடுப்பு பிரிவு கைது செய்தது. 1999ல் நடந்த குண்டுவெடிப்பு வழக்கில் முகமது அலி என்ற பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தொடர்புடைய டெய்லர் ராஜா நேற்று கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு காவல்துறை 30 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை கைது செய்து சாதனை படைத்துள்ளது. பயங்கரவாதிகளை பிடிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டது தமிழ்நாடு போலீஸ். அதிகாரிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்களின் பெயர்களை தெரிவிக்க முடியாது. மேலும், கடுமையான குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.