Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

அனைவரும் முன்வரிசையில் இருப்பார்கள் கடைசி பெஞ்ச்சே இனி கிடையாது: ‘ப’ வடிவில் இருக்கை அமைக்க பள்ளி கல்வித்துறை நடவடிக்கை

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி வகுப்பறைகளிலும் ‘ப’ வடிவில் இருக்கைகளை அமைக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்: வகுப்பறையில் வசதியான இருக்கை ஏற்பாடு கற்றலை மேம்படுத்துவதிலும், மாணவர்களை ஆசிரியர் நன்கு தொடர்பு கொண்டு உரையாடுவதிலும் முக்கியப் பங்காற்றுகிறது. இதை கருத்தில் கொண்டு பள்ளிகளில் ‘ப’ வடிவ இருக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும்.

இந்த அமைப்பில், ஒவ்வொரு மாணவரும் ஆசிரியர் மற்றும் கரும்பலகையை தெளிவாகப் பார்க்க முடியும். வகுப்பறையில் உள்ள அனைத்து மாணவர்களையும் ஆசிரியர்கள் எளிதில் தொடர்பு கொள்ள இயலும். மேலும், மாணவர்களின் செயல்பாடுகளை ஆசிரியர்கள் துல்லியமாக கண்காணிக்க முடியும். இதுதவிர கலந்துரையாடல்கள், கேள்வி பதில் அமர்வுகள், கருத்துகளை பகிர்ந்து கொள்ளுதல் ஆகியவற்றுக்கு ப வடிவ இருக்கை வசதி சமவாய்ப்பை வழங்குகிறது.

அதேபோல் தொழில்நுட்ப செயல்முறை விளக்கங்கள், குழு விவாதங்களுக்கும் இந்த முறை மிகவும் உகந்ததாக இருக்கும். மாற்றுத்திறன் மாணவர்களுக்கு சற்று வசதியாக அமையும். இந்த இருக்கை வசதியின்படி ஒவ்வொரு மாணவரும் முன்புற வரிசையில் இருப்பார்கள். இதன்மூலம் ஆசிரியர் பாடம் நடத்தும்போது வகுப்பில் உள்ள எவரும் மறைக்கப்படாமல் சிறந்த கற்றல் நடைபெறுவதை உறுதி செய்ய முடியும். குறிப்பாக ஆசிரியரின் நேரடிக் கண்காணிப்பில் இருப்பதால் மாணவர்களுக்கு கற்றலில் கவனச் சிதறல் ஏற்படாது.

பொதுவாக பாடப்பொருள் தொடர்பாக ஆசியர்களிடம் சந்தேகங்கள் எழுப்பவும், கருத்து பரிமாற்றம் செய்வும் சில மாணவர்கள் தயங்குவது வழக்கம். இதுபோன்ற மாணவர்கள் இனி எவ்வித தயக்கமும் இல்லாமல் அச்சமின்றி கற்றலில் ஆர்வத்துடன் பங்கேற்க முடியும். எனவே, அனைத்து முதன்மை, மாவட்டக்கல்வி அலுவலர்களும் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள தலைமை ஆசிரியர்களுக்கு மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் வகுப்பறையின் அளவைப் பொருத்து இந்த ப வடிவ இருக்கை வசதியைச் செய்ய அறிவுறுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ப’ வடிவிலான இருக்கை முறை மூலம், இனி கடைசி வரிசை மாணவர்கள் என்பது இருக்காது. இந்த அமைப்பினால் ஒவ்வொரு மாணவரும் முன்புற வரிசையில் இருப்பார்கள். இதனால் அனைவரும் கற்றலின் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படுவார்கள். எவரும் மறைக்கப்படாமல் சிறந்த கற்றல் நடைபெறும்.