Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பயணிகள் ரயில் கட்டண உயர்வை தொடர்ந்து சரக்கு ரயில் கட்டணம் உயருகிறது: ஆகஸ்ட் 15ல் அமல்படுத்த ரயில்வே திட்டம்

சேலம்: நாடு முழுவதும் பயணிகள் ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில், சரக்கு ரயில் கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல், இந்த சரக்கு ரயில் கட்டண உயர்வு அமலுக்கு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக ரயில்வேத்துறை விளங்கி வருகிறது. நாட்டின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் வகையில் ரயில் போக்குவரத்து இருப்பதால், தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்களில் பயணித்து வருகின்றனர்.

அதிலும், முக்கிய நகரங்களுக்கிடையே இயங்கும் ரயில்களில் அதிகப்படியான பயணிகள் பயணிக்கின்றனர். பயணிகள் போக்குவரத்திற்கு அளிக்கும் முக்கியத்துவம் போல், சரக்கு ரயில் போக்குவரத்திலும் அதிக கவனத்தை செலுத்தி வருகிறது. சாலை மார்க்க சரக்கு போக்குவரத்தை விட ரயில்வேயில் சரக்குகளை இடமாற்ற கட்டணம் குறைவாக இருப்பதால், பெரும் நிறுவனங்கள் சரக்கு ரயில் போக்குவரத்தை அதிகளவு பயன்படுத்துகிறது.

இச்சூழலில் நாடு முழுவதும் கடந்த 1ம் தேதி முதல் பயணிகள் ரயிலுக்கான கட்டணத்தை ரயில்வே நிர்வாகம் உயர்த்தியது. 500 கி.மீ., முதல் 1500 கீ.மீ., வரையிலான பயணித்திற்கு ரூ.5ம், 1501 கி.மீ., முதல் 2500 கி.மீ., வரைக்கும் ரூ.10ம், 2501 கி.மீ., முதல் 3000 கி.மீ., வரைக்கும் ரூ.15ம் கட்டணம் உயர்த்தப்பட்டது. ஏசி அல்லாத படுக்கை வசதி கொண்ட மெயில், எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 1 பைசாவும், ஏசி ரயில்களுக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 2 பைசாவும் என கட்டணத்தை உயர்த்தி அமலுக்கு கொண்டு வந்தனர்.

இந்த பயணிகள் ரயில் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், சரக்கு ரயிலுக்கான கட்டணத்தையும் உயர்த்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து ரயில்வே மண்டல பொதுமேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில், சரக்கு ரயில் கட்டண உயர்வை வரும் ஆகஸ்ட் 15 முதல் அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது.

சரக்கு ரயில்கள் ஸ்டேஷன்களில் நிறுத்தப்பட்டு, சரக்கை ஏற்றி, இறக்கும் போது நிறுத்தப்பட்டிருக்கும் நேரத்திற்கு ஒரு மணிக்கு இவ்வளவு என கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அந்த கட்டணத்தை 12 சதவீதம் வரை உயர்த்தவுள்ளனர். இதில், பாதை மாற்ற கட்டணமும் அதிகரிக்கிறது.

இன்ஜின் பராமரிப்பு மற்றும் உதிரிபாக தேய்மானம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இக்கட்டண உயர்வை அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சரக்கு ரயில் கட்டணத்தை பொருத்தளவில் கடந்த 16 ஆண்டுகளாக எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் உள்ளது. தற்போது, அந்த சரக்கு ரயில் கட்டணத்தில் உயர்வை ஏற்படுத்தவுள்ளனர். இது மக்களை நேரடியாக பாதிக்காது என்றாலும், சில பொருட்களின் விலைவாசி அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.