சரக்கு ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர், திருவள்ளூர் ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 16 பேரிடம் விசாரணை..!!
திருவள்ளூர்: சரக்கு ரயில் விபத்து தொடர்பாக ரயில் ஓட்டுநர், திருவள்ளூர் ஸ்டேஷன் மாஸ்டர் உட்பட 16 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த 13ம் தேதி மணலியில் இருந்து 52 பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் திருவள்ளூர் மற்றும் ஏகாட்டூர் இடையில் வந்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து தொடர்பாக 16பேரிடம் விசாரணை தொடங்கியுள்ளது. குறிப்பாக சரக்கு ரயிலை இயக்கி வந்த லோகோ பைலட், உதவி லோகோ பைலட், திருவள்ளூரின் ஸ்டேஷன் மாஸ்டர், ஏகாட்டூர் ஸ்டேஷன் மாஸ்டர்மற்றும் பாதுகாப்புத்துறை பொறியாளர்கள், சரக்கு ரயிலை கையாளக்கூடிய மேலாளர், அதிகாரிகளிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் விபத்துக்கான காரணம் என்ன? சிக்னல் எப்படி கொடுக்கப்பட்டது. ரயில் தடம் புரண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்தான விசாரணை நடத்துவது தொடர்பாக தற்போது தெற்கு ரயில்வேயின் தலைமை அலுவலகத்தில் விசாரணை தொடங்கி உள்ளது.
இத்தகைய ரயில் விபத்து காரணமாக 900 டன் அளவிற்கு கச்சா எண்ணெய் எரிபொருள் எறிந்துள்ளது. கச்சா எரிபொருள் எரிந்ததற்கான காரணம் என்ன. வேகனிலிருந்த பாதுகாப்பு அம்சங்கள் என்ன. எவ்வாறு விபத்து ஏற்பட்டது தொடர்பாக முழுமையான அறிக்கையோடு முக்கிய அதிகாரிகள் வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பணியாளர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடைபெறும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இத்தகைய ரயில் விபத்தால் சுமார் 36 மணி நேரமாக சீரமைப்பு பணிகள் நடந்து முடிந்து தற்போது 4 ரயில் தடங்களிலும் ரயில் செயல்பட தொடங்கி உள்ள நிலையில் ரயில் விபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த விசாரணை குழு தற்போது 16 பேரிடம் விசாரணையை தொடங்கி உள்ளது.