மீனம்பாக்கம்: புதுக்கோட்டை மாவட்டம், கரம்பக்குடியை சேர்ந்தவர் கவிக்குமார் (24). இவர் மீது கரம்பக்குடி காவல் நிலையத்தில் கடந்த 2019ம் ஆண்டு மோசடி உள்பட பல்வேறு பிரிவில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவரை போலீசார் தேடி வந்தனர். இதை அறிந்ததும் கவிக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அறிவித்தார். அதோடு, அனைத்து விமான நிலையங்களிலும் எல்ஓசி போடப்பட்டது.
இந்நிலையில், அபுதாபியில் இருந்து நேற்றிரவு சென்னைக்கு ஏர்அரேபியா ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் உள்பட ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்து அனுப்பி கொண்டிருந்தனர்.
அப்போது, தலைமறைவு குற்றவாளியான கவிக்குமாரும் வந்துள்ளார். அவரது பாஸ்போர்ட்டை ஆய்வு செய்தபோது தலைமறைவு குற்றவாளி என தெரிந்ததால் தனியறையில் அடைத்து வைத்தனர். பின்னர் புதுக்கோட்டை எஸ்பிக்கு தகவல் தெரிவித்தனர். அவரை கைது செய்ய போலீசார் சென்னைக்கு விரைந்துள்ளனர்.


