Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து காலமானார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி; கோபாலபுரம் இல்லத்தில் அரசியல் கட்சியினர், பொதுமக்கள் மரியாதை

சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து நேற்று காலமானார். அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அரசியல் கட்சியினர், பொதுமக்கள் நேரில் மரியாதை செலுத்தினர். தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர்-பத்மாவதி தம்பதியின் மூத்த மகன் மு.க.முத்து (77), இவர் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் நேற்று காலை காலமானார். மறைந்த மு.க.முத்துவின் மனைவி பெயர் சிவகாம சுந்தரி. இவர்களுக்கு அறிவுநிதி என்ற மகனும், தேன்மொழி என்ற மகளும் உள்ளனர். மு.க.முத்துவின் உடல் சென்னை ஈஞ்சம்பாக்கம் சாய்பாபா கோயில் அருகில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தனது அண்ணன் மறைவை அறிந்ததும் திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அவரது இல்லத்துக்கு சென்றார். அங்கு அவரது உடலுக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். அப்போது தனது சகோதரர் மு.க.முத்துவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். மேலும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்தனர்.

தொடர்ந்து மு.க.முத்துவின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக கலைஞரின் கோபாலபுரம் இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின் ரொம்ப சோகத்துடன் காணப்பட்டார். மேலும் மு.க.முத்து உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னாள் ஒன்றிய அமைச்சர் மு.க. அழகிரி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

மேலும் ராஜாத்தி அம்மாள், கனிமொழி எம்பி, மு.க.தமிழரசு, அமிர்தம் மற்றும் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ, பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், துணை தலைவர் கரு.நாகராஜன், திராவிடர் கழக துணை தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன், பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் அருட்தந்தை ஜோ.அருண், கவிஞர் வைரமுத்து, நடிகர் சத்யராஜ், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் எஸ்.ஏ.கே.சித்திக், காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் ஆலங்குளம் எம்.எஸ்.காமராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள், கட்சியினர், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

தொடர்ந்து மாலையில் கோபாலபுரம் இல்லத்தில் இருந்து மு.க.முத்துவின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவரது உடல் சென்னை பெசன்ட்நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. மு.க.முத்துவின் மறைவையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்க இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. மேலும் திமுக மூத்த தலைவர்கள் பங்கேற்க இருந்த பல்வேறு நிகழ்ச்சிகளையும் ரத்து செய்தனர். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக கலை அரங்கத்தில் நேற்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் எழுதிய ‘‘அவரும் நானும்” என்ற புத்தக வெளியீட்டு விழா நடக்க இருந்தது. அந்த புத்தக வெளியீட்டு விழாவும் ஒத்திவைக்கப்பட்டது.

* தாய்-தந்தைக்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அண்ணனை இழந்து விட்டேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உருக்கம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி: கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய்-தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்து விட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது. தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் கலைஞர். கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாக திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து. நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கென தனிப்பாணியை வைத்திருந்தார்.

அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970ம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார். பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாக குடியேறினார் மு.க.முத்து. பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க’ என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.

என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரை பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் மு.க.முத்து. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்பு உணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* திரையுலகில் கோலோச்சிய மு.க.முத்து

திரையுலகில் 1972ல் கதாநாயகனாக மு.க.முத்து அறிமுகம் ஆனார். பிள்ளையோ பிள்ளை படம்தான் அவர் நடித்த முதல் படம். முதல் படமே மிகப் பெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து, பூக்காரி (1973), சமையல்காரன் (1974), அணையா விளக்கு (1975), இங்கேயும் மனிதர்கள் (1975), எல்லாம் அவளே (1977) ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார். படத்தில் நடித்ததுடன் இல்லாமல், பின்னணி பாடியும் பிரபலமானார். தொடர் வெற்றிப் படங்களால் சினிமா உலகில் தனி இடம் பிடித்தார். இவரின், ‘நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’, ‘சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க..’ உள்ளிட்ட பாடல்கள் மக்களால் மிக விரும்பப்பட்டவை. நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுடன் இவர் நடித்த பெரும்பாலான படங்கள் வெற்றி பெற்றவை. மு.க.முத்து நடித்த ‘பிள்ளையோ பிள்ளை’ படத்தின் படப்பிடிப்புக்கு வந்து கிளாப் அடித்து எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். கடந்த 2006ம் ஆண்டு தேவா இசையில் ’மாட்டுத் தாவணி’ என்ற படத்தில் ஒரு பாடல் பாடியிருந்தார் மு.க.முத்து என்பது குறிப்பிடத்தக்கது.