Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வேளாங்கண்ணியில் கொடியேற்றம் கோலாகலம்: செப். 7ல் தேர் பவனி

நாகை: வேளாங்கண்ணி பேராலயத்தில் ஆண்டு பெருவிழா கொடியேற்றம் நேற்று மாலை கோலாகலமாக நடந்தது. நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புகழ்பெற்ற ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. பேராலயத்தில் அன்னையின் பிறந்த நாளை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் ஆண்டு பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டு பேராலய ஆண்டு பெருவிழா நேற்று (29ம்தேதி) மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் மாலை 5.45 மணிக்கு கொடியை புனிதம் செய்து வைத்தார். இதை தொடர்ந்து திருத்தல கலையரங்கில் மன்றாட்டு, நற்கருணை ஆசி, தமிழில் திருப்பலி ஆகியவை நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேராலய முகப்பில் இருந்து அன்னையின் உருவம் வரையப்பட்ட கொடி ஊர்வலமாக புறப்பட்டு கடற்கரை சாலை வழியாக சென்று மீண்டும் பேராலயம் வந்தடைந்தது.

மாலை 6.45 மணியளவில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள், ‘ மரியே வாழ்க’.... ஆவே மரியா ’ என்று கோஷம் எழுப்பினர். கண்கவரும் வாணவேடிக்கை நிகழ்த்தப்பட்டு, வண்ண பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. பேராலயம் முழுவதும் மின்விளக்குகளால் ஜொலித்தது. இன்று (30ம் தேதி) முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை காலை, மாலை நேரங்களில் பேராலயம் மேல்கோவில், மாதாகுளம், பேராலயம் கீழ்கோவில் ஆகிய இடங்களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்கனி ஆகிய மொழிகளில் திருப்பலி நடைபெறுகிறது.

விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி வரும் 7ம் தேதி இரவு நடைபெறுகிறது. 8ம் தேதி காலை 6 மணிக்கு, விண்மீன் கோயிலில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் சகாயராஜ் தலைமையில் அன்னையின் பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு கூட்டு பாடல் திருப்பலி நிறைவேற்றப்படும். இதை தொடர்ந்து மாலை 6 மணிக்கு அன்னையின் திருக்கொடி இறக்கப்படுவதுடன் விழா நிறைவடைகிறது.