அதிகாரிகள் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து; சிவகாசியில் 200 பட்டாசு ஆலைகள் ஸ்டிரைக்: ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பு
சிவகாசி: சிவகாசியில் அதிகாரிகள் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து டிஆர்ஓ உரிமம் பெற்ற 200 பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. இவைகள் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துக்களால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
இதையடுத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் விருதுநகர் கலெக்டருக்கு அளித்த உத்தரவில், ‘பட்டாசு ஆலைகளில் இனி விபத்து நடக்கக்கூடாது. மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகள் அனைத்தும் உரிமங்களுடன் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். பட்டாசு ஆலை தொழிலாளர்களுக்கு காப்பீடு செய்வதை கட்டாயமாக்குவது குறித்து தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும். இது தொடர்பான ஆய்வறிக்கையை ஜூலை 22ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது. இதையடுத்து, விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் சிவகாசி பகுதியிலுள்ள பட்டாசு ஆலைகளில் இன்று ஆய்வை துவக்கினர். இதனால், டிஆர்ஓ உரிமம் பெற்ற சுமார் 300க்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகளில் தயாரிப்பு பாதிக்கும் அபாயம் உள்ளது என உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக இன்று முதல் 15 நாட்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என பட்டாசு ஆலை உரிமையாளர்கள் முடிவு செய்தனர். இதன்படி, இன்று டிஆர்ஓ உரிமம் பெற்ற 200க்கும் மேற்பட்ட ஆலைகள் மூடப்பட்டன. இதனால், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.