திடீரென தீப்பற்றி எரிந்த விமானத்தின் டயர்; அவசர வழியில் 173 பயணிகள் வெளியேற்றம்: அமெரிக்காவில் பெரும் பீதி
வாஷிங்டன்: அமெரிக்காவில் புறப்பட தயாரான விமானத்தின் டயர் திடீரென தீப்பற்றி எரிந்ததால் ஏற்பட்ட பரபரப்பில், அவசர வழியில் 173 பயணிகள் வெளியேற்றப்பட்டதால் அவர்கள் உயிர் தப்பினர். அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்திலிருந்து மியாமிக்குப் புறப்படத் தயாரான அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஏஏ-3023, ஓடுபாதையில் புறப்பட முயன்றபோது, அதன் லேண்டிங் கியரில் இருந்தது திடீரென டயர் பகுதியில் ஏற்பட்ட கோளாறு காரணமாகத் தீப்பிடித்து புகை மண்டலமாக மாறியது. உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டு, அவசரகால வெளியேற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. விமானத்தில் இருந்த 173 பயணிகளும் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். லேண்டிங் கியர் டயரில் ஏற்பட்ட பழுதுதான் விபத்திற்குக் காரணம் என விமான நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து ஃபெடரல் ஏவியேஷன் நிர்வாகம் விசாரணை நடத்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, விமானத்திலிருந்து அவசரமாக வெளியேற்றப்பட்ட பயணி ஒருவர், தனது குழந்தையை விட உடைமைக்கு முக்கியத்துவம் கொடுத்ததாகக் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார்.
சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில், அந்த நபர் ஒரு கையில் தனது குழந்தையையும், மறு கையில் தனது பயணப் பையையும் பிடித்துக்கொண்டு அவசர சறுக்கு பாதையில் இறங்குவது பதிவாகியுள்ளது. சறுக்கி இறங்கிய வேகத்தில் நிலைதடுமாறிய அவர், தன் குழந்தையின் மீதே விழுவது போன்ற காட்சிகள் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில், போயிங் 737 ரக விமானம் தீப்பிடிக்கும் சம்பவம் கடந்த ஐந்து மாதங்களில் இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர், கடந்த மார்ச் மாதம் டென்வரில் இருந்து டல்லாஸ் நகருக்குப் புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான போயிங் 737-800 ரக விமானம் ஒன்று, ஓடுபாதையில் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.