Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தந்தை கொலைக்கு பழி வாங்க சட்டம் படித்தவர் சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் கூலிப்படையால் வெட்டி படுகொலை: பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் போலீசில் சரண்

தாராபுரம்: சென்னை ஐகோர்ட் வழக்கறிஞர் கூலிப்படையினரால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கு தொடர்பாக பள்ளி தாளாளரான வக்கீலின் சித்தப்பா உள்பட கூலிப்படையினர் 5 பேர் தாராபுரம் போலீசில் சரணடைந்தனர். திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் லிங்கசாமி. முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி சுபத்ராதேவி. இவர்களது மகன் முருகானந்தம் (35). சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வந்தார். திருமணமாகாதவர். லிங்கசாமி கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு காங்கயம் அருகே கூலிப்படையால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கைதானவர்கள் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுதலை செய்யப்பட்டனர்.

இதனால் முருகானந்தம் தந்தை கொலைக்கு தனது சித்தப்பா தண்டபாணி தான் காரணம் என்றும், அவரை சட்டப்படியோ அல்லது வேறு வகையிலோ பழிக்குப்பழி வாங்க வேண்டும் என்று சபதம் எடுத்துக்கொண்டதாக தெரிகிறது.

இதற்காகவே முருகானந்தம் சட்டம் படித்து வக்கீலானார். அவரது சித்தப்பா தண்டபாணி தாராபுரம் நகராட்சி மத்திய பஸ் நிலையம் எதிர்புறம் தேன்மலர் மெட்ரிக் பள்ளி என்ற பெயரில் பள்ளியை தொடங்கி நடத்தி வந்தார். தனது அண்ணன் மகன் சபதம் எடுத்த தகவல் அறிந்ததும் தண்டபாணி மிகவும் உஷாராகவே இருந்து வந்தார். மேலும் தனது மகன் கார்த்திகேயனையும் (34) வக்கீலுக்கு படிக்க வைத்தார்.

தற்போது பள்ளியை மகன் கார்த்திகேயன் கவனித்து வருகிறார். இந்நிலையில் பள்ளி நடத்த 3வது தளம் வரை அனுமதி பெற்றிருந்த தண்டபாணி சட்டவிரோதமாக 4வது மாடி கட்டி அங்கும் வகுப்புகளை நடத்தி வந்துள்ளார். இந்த தகவல் முருகானந்தத்திற்கு தெரியவந்ததும், தண்டபாணியை சட்டரீதியாக பழிவாங்க இதுதான் சரியான நேரம் என்று கருதி 4வது மாடி கட்டியது சட்டவிரோதம் என்று சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் பள்ளியின் 4வது மாடியை இடித்து அகற்றும்படி பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட்டது. அதன்படி கல்வித்துறை அதிகாரிகள் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஆய்வு செய்தனர்.

அப்போது பள்ளி கோடை விடுமுறையின் போது கூடுதல் கட்டிடத்தை இடித்துக்கொள்வதாக பள்ளி தாளாளர் தண்டபாணி உறுதியளித்தார். ஆனால் உறுதியளித்தபடி கூடுதல் கட்டிடத்தை இடிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதையடுத்து மீண்டும் ஐகோர்ட்டில் முருகானந்தம் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். இதையடுத்து வேறுவழியின்றி கடந்த மே மாதம் பள்ளியின் 4வது மாடி இடித்து அகற்றப்பட்டது. இதன்பிறகு மீண்டும் சென்னை ஐகோர்ட்டில் முருகானந்தம் ஒட்டுமொத்த பள்ளி கட்டிடமும் முறைகேடாக கட்டப்பட்டுள்ளதாகவும், கட்டிடம் உறுதித்தன்மை இல்லாமல் உள்ளதாகவும் வழக்கு தாக்கல் செய்தார்.

அந்த வழக்கின் மீது விளக்கம் கேட்டு கோர்ட்டில் இருந்து கடந்த 10 நாட்களுக்கு முன்பு தண்டபாணிக்கு நோட்டீஸ் அனுப்பட்டது. இதனால் முருகானந்தம் மீது கடும் ஆத்திரமடைந்த சித்தப்பா தண்டபாணி முருகானந்தத்தை தீர்த்து கட்ட முடிவு செய்து, ஏற்கனவே தனக்கு நன்கு அறிமுகமான கூலிப்படைக்கு தகவல் தெரிவித்து கடந்த சில நாட்களாக தன்னுடைய பள்ளி வளாகத்திலேயே கூலிப்படையை தங்க வைத்திருந்தார். இந்நிலையில் பள்ளி கட்டிடத்தின் உறுதிதன்மை தொடர்பாக பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக நேற்று மதியம் கோர்ட் ஊழியர் ஒருவர், சர்வேயர் 2 மற்றும் உறவினர் ஒருவர் என 4 பேருடன் வக்கீல் முருகானந்தம் ஒரு காரில் வந்தார்.

அப்போது காரை பள்ளியில் இருந்து 300 மீட்டர் தொலைவிற்கு அப்பால் சாலையோரம் நிறுத்திவிட்டு கோர்ட் ஊழியர்களுடன் முருகானந்தம் நடந்து வந்தார். அவர்களை பள்ளிக்குள் விட காவலாளி அனுமதி மறுத்துவிட்டார். இதனால் திரும்பி கார் நிறுத்தப்பட்டிருந்த இடத்திற்கு கோர்ட் ஊழியர்களுடன் சென்று கொண்டிருந்த போது ஏற்கனவே தயாராக இருந்த கூலிப்படையினர் அரிவாளால் முருகானந்தத்தின் பின்தலையில் வெட்டினர். நிலைகுலைந்து சரிந்து விழுந்ததும் அக்கும்பல் சரமாரியாக வெட்டி விட்டு தலைமறைவாகினர். இதில் முருகானந்தம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். உடன் வந்த கோர்ட் ஊழியர்கள் அலறி அடித்து தப்பி ஓடினர்.

சிறிது தூரம் சென்றதும் தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், இக்கொலை தொடர்பாக பள்ளியின் தாளாளர் தண்டபாணி மற்றும் கூலிப்படையை சேர்ந்த 4 பேர் தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் நேற்று மாலை சரணடைந்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி தாளாளர் கூலிப்படையை வைத்து சொந்த அண்ணன் மகனையே வெட்டி கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* வக்கீல்கள் இன்று கோர்ட் புறக்கணிப்பு

தாராபுரத்தில் வக்கீல்கள் சங்க அவசர கூட்டம் நேற்று நடந்தது. இதில் வக்கீல் முருகானந்தம் கொலையை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 29ம் தேதி (இன்று) ஒரு நாள் கோர்ட்டு புறக்கணிப்பு செய்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.