குருகிராம்: ஊரார் கேலி செய்ததால் முன்னாள் டென்னிஸ் வீராங்கனையான மகளை சுட்டுக்கொன்றதாக தந்தை போலீசிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அரியானா மாநிலம் குருகிராமைச் சேர்ந்த தேசிய அளவிலான டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவுக்கு (25), தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடுதை நிறுத்திவிட்டு, சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் டென்னிஸ் அகாடமியைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வந்தார். ஆனால், ‘மகள் வருமானத்தில் வாழ்கிறாயா?’ என்றும், மகளின் நடத்தை குறித்தும் கிராமத்தினர் கேலி, கிண்டல் செய்வதாக அவரது தந்தை தீபக் யாதவ் கடும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால், அந்த அகாடமியை மூடிவிடுமாறு ராதிகாவிடம் பலமுறை வற்புறுத்தியுள்ளார். ஆனால், ராதிகா அதற்கு மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். கிராமத்தினரின் அவமானத்தையும், அழுத்தத்தையும் தாங்கிக்கொள்ள முடியாத தந்தை, மகள் ராதிகா யாதவ் மீது கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சுமார் 10.30 மணியளவில், அவர்களது வீட்டின் முதல் தளத்தில் உள்ள சமையலறையில் ராதிகா இருந்தபோது, தந்தை தீபக் யாதவ் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரை முறை சுட்டுள்ளார்.
துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டு ஓடிவந்த ராதிகாவின் சித்தப்பா குல்தீப் யாதவ் மற்றும் அவரது மகன், ரத்த வெள்ளத்தில் கிடந்த ராதிகாவை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே தீபக் யாதவ் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக குருகிராம் காவல்துறை தெரிவித்துள்ளது. கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, ரத்த மாதிரிகள் உள்ளிட்ட தடயங்களை சேகரித்த போலீசார், தீபக் யாதவிடம் விசாரணை நடத்தி, நேற்று குருகிராம் நகர நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாாரித்த நீதிபதி டென்னிஸ் வீராங்கனை தந்தை தீபக் யாதவை ஒரு நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் தந்தை-மகள் இருவருக்கும் அவரது சமூக ஊடக செயல்பாடு மற்றும் அவர் நடித்த ஒரு இசை வீடியோ குறித்து வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவரது மரணத்திற்கு அதுதான் காரணமாக என்பதை போலீசார் உறுதிப்படுத்தவில்லை. மேலும் தாயார் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கண்முன்பே இந்த ெகாலை நடந்ததால் டென்னிஸ் வீராங்கனை ராதிகா யாதவ் கவுரவ கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதற்கிடையே ராதிகாவின் தாயார் போலீசில் வாக்குமூலம் அளிக்க மறுத்து, தனக்கு காய்ச்சல் இருப்பதாகவும், எதையும் பார்க்கவில்லை என்றும் கூறினார். இதனால் போலீசாரின் சந்தேகம் அதிகரித்துள்ளது.
* இசை வீடியோ காரணமா?
ராதிகா யாதவ் கடந்த 5 மாதங்களுக்கு முன் இனாமுல் ஹக் என்பவருடன் இசை வீடியோ ஒன்றில் இடம் பெற்றுள்ளார். இந்த இசை வீடியோ வீட்டில் பதற்றத்தைத் தூண்டியிருக்கலாம் என்றும், இந்தக் கோணத்திலும் விசாரிக்கப்படும் என்றும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த வீடியோ வெளியானதும் ராதிகா தனது இன்ஸ்டா கணக்கை மூடிவிட்டதாக இனாமுல் ஹக் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். ராதிகாவை 2 முறை மட்டுமே சந்தித்துள்ளேன். அவருடன் எனக்கு பழக்கம் கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார்.
* தனிப்பட்ட காரணமா?
ராதிகாவின் வருமானத்தில் குடும்பம் நடப்பதால், அதை சுட்டிக்காட்டி அடிக்கடி பலரும் தன்னை சிறுமைப்படுத்தியதால் மகளை சுட்டதாக அவரது தந்தை தனது வாக்குமுலத்தில் கூறியுள்ளார். ராதிகா ஒரு டென்னிஸ் அகாடமியை நடத்தி வந்தார். அவரது தந்தை அதை விரும்பவில்லை என்றும் தகவல் பரவி உள்ளது. இதை தீபக் சொந்த ஊரை சேர்ந்தவர்கள் மறுத்துள்ளனர். அவர்கள் கூறுகையில் குருகிராமில் தீபக்குக்கு பல சொத்துகள் உள்ளன. இவற்றின் மூலம் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரை அவர் மாத வாடைகை பெற்று வருகிறார். தீபக் பணக்காரர் என்பது கிராமத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். இவ்வளவு பணம் இருக்கும் ஒருவரை கிராமத்தில் யார் கேலி செய்யப் போகிறார்கள்? எனவே இந்தக் கொலைக்கு பின்னால் தனிப்பட்ட காரணம் ஏதாவது இருக்கும்’ என்று தெரிவித்தனர்.
* மார்பில் பாய்ந்த 4 குண்டுகள் தந்தை பொய் வாக்குமூலம் அம்பலம்
ராதிகா யாதவ் பிரேதபரிசோதனை முடிந்து நேற்று இறுதிச்சடங்கு நடந்தது. மூன்று மருத்துவர்கள் கொண்ட குழுவின் பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, ராதிகா மீது நான்கு தோட்டாக்கள் பாய்ந்துள்ளன. மூன்று மார்பிலும், ஒன்று தோளிலும் பாய்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ராதிகாவை பின்னால் இருந்து 5 முறை சுட்டதாகவும், அதில் 3 குண்டுகள் அவரது உடலில் பாய்ந்ததாகவும் அவரது தந்தை தீபக் யாதவ் தெரிவித்து இருந்தார். எப்ஐஆரிலும் இந்த தகவல் தான் இடம் பெற்று உள்ளது. ஆனால் பிரேதபரிசோதனையில் மார்பில் குண்டுகள் இருந்துள்ளது தெரிய வந்துள்ளதால் தீபக்யாதவ் வாக்குமூலம் பொய் என்பது தெரிய வந்துள்ளது. அவரிடம் இன்று போலீசார் இதுகுறித்து விசாரிக்க உள்ளனர்.