Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

போலி ஆவணங்கள் மூலம் ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலம் அபகரிப்பு குறித்து விசாரிக்க கமிட்டி: பதிவுத்துறை ஐஜி உத்தரவு

சென்னை: ரூ.300 கோடி மதிப்புள்ள கலாஷேத்ரா நிலத்தை போலி ஆவணம் மூலம் அபகரித்த விவகாரத்தில் தினகரன் செய்தி எதிரொலியாக விசாரணை கமிட்டி ஒன்றை அமைத்து பதிவுத்துறை ஐஜி உத்தரவிட்டுள்ளார். சென்னை திருவான்மியூரில் ஒன்றிய அரசுக்குச் சொந்தமான கலாஷேத்ரா நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைவரே டெல்லியின் கவர்னர்தான். இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக 100 ஏக்கருக்கும் மேல் இடம் உள்ளது. இந்த இடத்தின் ஒரு பகுதியான 2.61 ஏக்கர் நிலத்தை போலி ஆவணம் மூலம் சைதாப்பேட்டை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்ய ஒரு கும்பல் முயன்றுள்ளது. அவர்கள் அதற்கான பட்டாவையும் வைத்திருந்தனர். அந்தப் பட்டாவில் கலாஷேத்ரா மற்றும் தனி நபர்களின் பெயர்கள் கூட்டாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சார்பதிவாளர், பதிவு செய்ய மறுத்து விட்டார்.

இதுகுறித்து அந்தப் பத்திரத்தை ஆய்வு செய்த அதிகாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். கலாஷேத்ரா நிறுவனத்துக்குச் சொந்தமான 100 ஏக்கருக்கும் மேல் நிலம் உள்ளது. இந்த நிலத்தின் ஒரு பகுதியான 2.61 ஏக்கர் நிலத்தை 1945ம் ஆண்டு ஒருவருக்கு சொந்தமானது போலவும், அவரது வாரிசுகள் தற்போது ஒருவருக்கு பவர் கொடுப்பதுபோலவும் கடந்த ஆண்டு சைதாப்பேட்டை ஜாய்ண்ட்1 அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு மட்டும் ரூ.300 கோடி. இந்த நிலத்தின் பவர் பத்திரம் தொலைந்து விட்டதாக போலீசில் புகார் கொடுத்தது போலவும், அதற்காக போலீசார் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சான்றிதழ்கள் கொடுத்ததுபோலவும் போலியான ஆவணங்களை தயாரித்துள்ளனர்.

மேலும் வருவாய்த் துறையின் உதவியுடன் கலாஷேத்ரா நிறுவனத்தின் சர்வே எண்ணிலேயே ஒரே பட்டாவில் கலாஷேத்ரா மற்றும் போலி ஆவணங்களை தயாரித்தவர்களின் பெயர்களுக்கு பட்டா வாங்கியுள்ளனர். இந்த பட்டா மற்றும் சைதாப்பேட்டை ஜாய்ண்ட் 1, சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட பவர் பத்திரத்துடன்தான் தற்போது அந்த நிலத்தை ஒரு ஒரு நிறுவனத்துக்கு விற்பனை செய்ய முயன்றுள்ளனர் என்று தெரியவந்தது. வழக்கமாக வாரிசு அடிப்படையில் ஒரு நிலத்தை பதிவு செய்ய வந்தால், முன் ஆவணம் இருக்க வேண்டும். ஆனால், 1945ம் ஆண்டு ஒருவருக்குச் சொந்தமானது என்று கூறும்போது, முன் ஆவணம் பெற்று இருக்க வேண்டும்.

ஆனால் எந்தவித முன் ஆவணமும் இல்லாமல் பவர் பத்திரத்தை பதிவு செய்து முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தற்போது தெரியவந்துள்ளது. இதில் இருந்தே இந்த விவகாரத்தில் பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. அதைத் தொடர்ந்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். இந்த முறைகேடு குறித்து விசாரணை நடத்த, கூடுதல் பதிவுத்துறை தலைவர் (முத்திரை மற்றும் பதிவு) தலைமையில் துணைப் பதிவுத்துறை தலைவர் (செங்கல்பட்டு), மாவட்டப் பதிவாளர் (தணிக்கை) வடசென்னை, மத்திய சென்னை, பதிவுத்துறை தலைவர் அலுவலக கண்காணிப்பாளர்கள் சி மற்றும் ‘சிஏ (பிரிவு ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்படுகிறது.

இந்தக் குழு தங்களுக்குள் ஒருங்கிணைந்து செயல்பட்டு, செயலாக்க திட்டத்தினை வகுத்து, பதிவு செய்த அலுவலரை விசாரித்து வாக்குமூலம் பெற்றும் உரிய அலுவலகத்திற்கு நேரில் சென்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணம், சம்பந்தப்பட்ட ஆவண ஆதாரங்களை சேகரித்தும், அதனை ஆய்வு செய்தும் ஒரு வார காலத்திற்குள் உரிய அறிக்கையினை அளித்திட கோரப்படுகிறது என்று தனது உத்தரவில் கூறியுள்ளார். பதிவுத்துறையில் வழக்கமாக முறைகேடு நடந்தால், அதை தணிக்கை செய்ய மாவட்ட பதிவாளர் உள்ளார். அவர் அந்த முறைகேட்டை கண்டுபிடித்து அரசுக்கு அறிக்கை அளித்திருக்க வேண்டும்.

ஆனால் தணிக்கை மாவட்ட பதிவாளர் இந்த முறைகேட்டை கண்டுபிடிக்காமல் விட்டு விட்டார். இதனால், அவருக்கு இந்த முறைகேட்டில் உள்ள பங்கு குறித்து விசாரணை நடத்துவது குறித்து ஐஜி தனது உத்தரவில் குறிப்பிடவில்லை.

வழக்கமாக ஒரு முறைகேடு நடந்தால், பதிவு செய்தவரையும், மாவட்டப் பதிவாளரையும் சேர்த்துதான் நடவடிக்கை எடுப்பதுண்டு. ஆனால் இந்த விவகாரத்தில் மாவட்டப் பதிவாளரை கண்டு கொள்ளவில்லை. மேலும், முறைகேட்டில் ஈடுபட்ட சார்பதிவாளர் மீது தற்காலிகமாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.