இயந்திரமயமாகி விட்ட இன்றைய வாழ்க்கை சூழலில் ஸ்மார்ட் போன்கள் என்பது மனித வாழ்வில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாகி நிற்கிறது. உள்ளங்ைகயில் உலகத்தை கொண்டு வரும் ஸ்மார்ட் போன்கள், நமது பெரும்பாலான பணிகளை விரைந்து முடிப்பதற்கு துணையாக நிற்கிறது. விஞ்ஞானத்தின் இந்த அரிய கண்டுபிடிப்பை நாம் பயன்படுத்தி பலன் பெறுவது உண்மையில் ெபருமைக்குரியது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். இந்த வகையில் அளவுக்கு மிஞ்சிய நேரம், நாம் செல்போன்களில் மூழ்கி கிடப்பது பெரும் ஆபத்துக்கு வழிவகுத்து விடும் என்று ஏற்கனவே ஆய்வுகள் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் கொரியாவின் ஹன்யாங் பல்கலைக்கழக மருத்துவ மையமானது உலகளாவிய ஸ்மார்ட் போன் பயன்பாடுகள் மற்றும் அது சார்ந்த அபாயங்கள் குறித்த ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சராசரியாக ஒருவர் 3 மணி நேரம் 15 நிமிடங்கள் செல்போனில் செலவழிக்கிறார். 18 முதல் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் அதிகளவில் செல்போனில் நேரத்தை செலவிடுகின்றனர். இதில் 5 பேரில் ஒருவர் நான்கரை மணி நேரம் செல்போனுக்கு செலவிடுகிறார். இந்த வகையில் இளம்பருவத்தினரிடம் செல்போன் பயன்பாடு அதிகளவில் உள்ளது பெரும் அபாயமாக மாறியுள்ளது.
தினசரி நான்கு மணி நேரத்திற்கும் மேலாக ஸ்மார்ட்போன்களில் கவனத்தை செலுத்தும் இளம்பருவத்தினர் மோசமான மனநலம் கொண்டவர்களாக உள்ளனர். மனநல கோளாறுகள், தூக்க பிரச்னைகள், கண் தொடர்பான பிரச்னைகள் மற்றும் தசைக்கூட்டு கோளாறுகள் போன்ற மோசமான விளைவுகளுக்கு அதிகநேரம் செல்போன் பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணம். போதை பழக்கம் போன்றவற்றுக்கும் ஸ்மார்ட் போன் பயன்பாடு வழிவகுக்கிறது. எனவே ஸ்மார்ட் போனை எவ்வளவு குறைவாக பயன்படுத்துகிறோமோ அவ்வளவு பாதிப்புகள் குறையும் என்பது ஆய்வுகள் தெரிவித்துள்ள தகவல்.
இதுகுறித்து தகவல் தொழில்நுட்பம் சார்ந்த மருத்துவ நிபுணர்கள் கூறியதாவது:
ஐரோப்பிய நாடுகளில் இருப்பவர்களை விட, இந்தியாவில் செல்போன் பயன்படுத்துவோர் அதிக பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். இதற்கு நம் நாட்டில் நிலவும் வெப்பமான சூழல், உடல் எடை குறைவு, கொழுப்பு சத்து குறைவு போன்றவை காரணமாக இருக்கின்றன. ஸ்மார்ட்போனை நாம் பயன்படுத்தும்போது தலைப்பகுதியில் வெப்பம் அதிகரிக்கிறது. மூளைக்கு வரும் ரத்தம் இந்த வெப்பத்தை உடலின் மற்ற பகுதிகளிலும் பரவச் செய்கிறது. இதனால் உடலின் வெப்ப நிலை அதிகரிக்கிறது.
மேலும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது வெளியாகும் கதிர்வீச்சு மிகவும் அபாயமானது. இதுபோன்ற கதிர்வீச்சால் மறதி, தூக்கமின்மை, அஜீரணம் உட்பட பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் என்று ஒன்றிய அரசின் ஆய்வுக் குழு ஏற்கனவே எச்சரித்துள்ளது. அதைப் பின்பற்றாமல் தயாரிக்கப்படும் மலிவான செல்போன்களையே 70 சதவீதம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தவகையிலும் ஸ்மார்ட் ேபான்களால் மனிதர்களுக்கு மறதி, கவனக்குறைவு, ஜீரண உறுப்புகளில் கோளாறு உட்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்று ஆய்வுக்குழு எச்சரித்துள்ளது. இந்தநிலையில் பலமணி நேர ஸ்மார்ட் பயன்பாடு என்பது மூளையோடு தசைநார் அழற்சி, கீல்வாதம் போன்ற தசைக்கூட்டு கோளாறுகளை ஏற்படுத்தும். ஒரு கட்டத்தில் அபாயத்தை ஏற்படுத்தி விடும். இதையே சமீபத்திய ஆய்வுகளும் கோடிட்டு காட்டியுள்ளது. இதுமட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளில் நடந்த ஆய்வுகளில் பத்து அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக செல்போன் பயன்படுத்துபவர்களுக்கு ஒலி நரம்பு மண்டலத்தின் அபாயம் அதிகமாக இருப்பதும் தெளிவாகியுள்ளது. எனவே இதுபோன்ற அபத்தங்களை உணர்ந்து அளவோடு ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதே மிகவும் நல்லது. இவ்வாறு மருத்துவ நிபுணர்கள் கூறினர்.
கண் வறட்சி பாதிப்பு வரும்
‘‘செல்போன், லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தொடர்ச்சியாக உபயோகிக்கும் போது கண் வறட்சி பாதிப்பும் ஏற்படுகிறது. மின்னணு சாதனங்களை கண் இமைக்காமல் பார்ப்பதால் 80 சதவீதம் பேருக்கு வறட்சி ஏற்படுவதாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகளவில் 340 மில்லியன் மக்கள் கண்வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஆண்டுதோறும் 10 மில்லியன் மக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். இந்தியாவில் இருவரில் ஒருவருக்கு கண் வறட்சி பாதித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. இதனை தவிர்க்க நிமிடத்திற்கு 20 முறை கண் இமைகளை சிமிட்ட வேண்டும். தூரமாக பார்க்க வேண்டும். வௌிச்சத்தை தவிர்க்கும் கண்ணாடிகளை உபயோகிப்பது அவசியம்’’ என்பதும் மருத்துவர்கள் வழங்கியுள்ள அறிவுரை.
புற்று நோய் அபாயம் 400 சதவீதம் அதிகம்
‘‘ஸ்மார்ட் போனில் அதிகநேரம் பேசும் இளம்வயதினருக்கு, மூளை புற்றுநோய் வரும் அபாயம் 400 சதவீதம் அதிகம். குறிப்பாக குழந்தைகளின் மெல்லிய மண்டை ஓட்டுக்குள் செல்போன்களின் மின்காந்த கதிரியக்கம் ஆழமாக ஊடுருவுகிறது. இதுவே பெரும் அபாயத்திற்கு காரணமாகிறது. முதலில் தலைவலி, தூக்கமின்மை, மயக்கம், கவனக்குறைவு, காதில் இரைச்சல், ஞாபகசக்தி குறைவு, அஜீரணம் ஏற்படும். பின்னர் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதுவே ஒரு கட்டத்தில் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைக்கிறது. இதை உணர்ந்து குழந்தைகள், வாலிப வயதினர், கர்ப்பிணிகள் போன்றவர்கள் ஸ்மார்ட் போனை அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக செல்போனை தலைப்பகுதிக்கு அருகே கொண்டு செல்லாமல், ‘ஹெட்போன்’ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது சிறந்தது,’’ என்கின்றனர் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள்.