லண்டன்: இந்தியா - இங்கிலாந்து 5-வது டெஸ்ட் ஓவலில் இன்று தொடங்குகிறது. இந்தியாவுக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்தியாவின் ப்ளேயிங் 11-ல் பும்ரா இடம்பெறவில்லை, பண்ட்-க்கு மாற்று வீரராக சேர்க்கப்பட்ட நாராயணன் ஜெகதீஷ் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விக்கெட் கீப்பராக துரூவ் ஜூரெல் செயல்படுகிறார்.
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன் - தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது மற்றும் 3-வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. பர்மிங்காமில் நடந்த 2-வது டெஸ்டில் இந்தியா 336 ரன்கள் வித்தியாசத்தில் வாகை சூடியது. 4-வது டெஸ்ட் 'டிரா' ஆனது.
இதனால் தொடரில் இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இதனையடுத்து இரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவலில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் இரு தினங்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்நிலையில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் பொறுப்பு கேப்டன் ஆலி போப் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.