Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பொறியியல் படிப்பு கவுன்சலிங் தொடங்கியது: முதல் நாளில் 516 பேர் பங்கேற்பு

சென்னை: பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில் 2025-2026ம் கல்வி ஆண்டில் மாணவ, மாணவியரை சேர்ப்பதற்கான கவுன்சலிங் நேற்று தொடங்கியது. அண்ணா பல்கலைக் கழகம் மற்றும் அத்துடன் இணைந்த பொறியியல் கல்லூரிகளில் பிஇ, மற்றும் பிடெக் படிப்புகளில் இந்த ஆண்டில்( 2025-2026)சேர்ந்து படிக்க விண்ப்பித்துள்ள மாணவ மாணவியருக்கான சேர்க்கை தொடர்பான அறிவிப்பு கடந்த மே 7ம் தேதி வெளியிடப்பட்டது. அதே நாளில் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க இறுதி நாள் ஜூன் 9ம் தேதி வரை அனுமதிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக ரேண்டம் எண் ஜூன் 11ம் தேதி வெளியிடப்பட்டு, சான்று சரிபார்ப்பு ஜூன் 20ம் தேதி வரை நடந்தது. பின்னர் தரவரிசைப் பட்டியல் 27ம் தேதி வெளியிடப்பட்டு, ஜூலை 7ம் தேதி முதல் கவுன்சலிங் தொடங்கும் என்றும் அறிவித்து இருந்தார். அதன்படி, பிஇ, பிடெக் படிப்புகளுக்கான சேர்க்கை கவுன்சலிங் திட்டமிட்டபடி நேற்று தொடங்கியது. அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைப்பு பெற்ற அரசு மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகள் சுமார் 445 கல்லூரிகளில் பிஇ மற்றும் பிடெக் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன.

இவற்றில் 2025-2026ம் கல்வி ஆண்டில் சேர ஆன்லைன் விண்ணப்பங்கள் 3 லட்சத்து 2 ஆயிரத்து 374 மாணவ மாணவியர் தங்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்திருந்தனர். அவர்களில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். அவர்களிலும் 2 லட்சத்து 26 ஆயிரம் மட்டுமே உரிய சான்றுகளையும் பதிவேற்றியுள்ளனர். விண்ணப்பித்த மாணவ மாணவியரில் 2 லட்சத்து 50 ஆயிரத்து 298 பேருக்கு சான்று சரிபார்க்கப்பட்டுள்ளது. இதன்படி பிஇ, பிடெக் படிப்புகளில் சேர தகுதி பெற்றுள்ளவர்கள் 2,41,641 பேர். அவர்களில் 2,39,299 பேர் பொதுப்பிரிவுக்கும், 2342 பேர் தொழில் கல்வியின் கீழும் தகுதி பெற்றுள்ளனர்.

இதையடுத்து, அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ் வழியில் படித்து சிறப்பு ஒதுக்கீட்டின்(7.5%) கீழ் இடம் பெற்றுள்ள மாணவ, மாணவியருக்கான கவுன்சலிங் இணையதளம் மூலம் நேற்று காலை 10 மணி அளவில் தொடங்கியது. முதல் நாளான நேற்று மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர், விளையாட்டுப் பிரிவு மாணவ மாணவியர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் என மொத்த 516 பேர் கவுன்சலிங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டனர். மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியருக்கான இடங்கள் மொத்தம் 699 உள்ள நிலையில் 137 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். விளையாட்டுப் பிரிவில் 38 இடங்களுக்கு 363 பேரும், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கான இடங்கள் 11 உள்ள நிலையில் 12 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான கவுன்சலிங் ஆன்லைன் மூலம் தொடங்கியது.

இன்றைய கவுன்சலிங்கில் பொதுப்பிரிவுக்கான கவுன்சலிங்கில் சிறப்பு பிரிவு மாணவ மாணவியர், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்கள் வாரிசுகள், விளையாட்டு வீரர்களுக்கு 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடக்கும். பொதுக் கவுன்சலிங் இணைய தளம் மூலம் பொதுக் கல்வி, தொழில் முறைக் கல்வி, அரசுப் பள்ளி 7.5% ஒதுக்கீடு பிரிவுகளுக்கு 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கும். இதற்கு பிறகு துணைக் கவுன்சலிங் இணைய தளம் மூலம் ஆகஸ்ட் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடக்கும். எஸ்சிஏ காலியிடங்கள், எஸ்சி பிரிவினருக்கான கவுன்சலிங் ஆகஸ்ட் 25 மற்றும் 26ம் தேதிகளில் நடக்கும். அத்துடன் கவுன்சலிங் முடிவடைகிறது.