ஊட்டி: முதுமலை புலிகள் காப்பகம் மசினகுடி-தெப்பக்காடு சாலையில் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகளை கண்டு சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது. இதனால், முதுமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட தெப்பக்காடு, மசினகுடி உட்பட அனைத்து பகுதிகளும் தற்போது பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இதனால் முதுமலையில் சாலையோரங்களில் காட்டு யானை, காட்டு மாடுகள், மான்கள் என பல்வேறு விலங்குகளையும் காண முடிகிறது. இவைகள் சாலையோரங்களில் வலம் வருகின்றன. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
குறிப்பாக, குட்டிகளுடன் கூட்டம் கூட்டமாக வலம் வரும் காட்டு யானைகளை பார்க்க முடிகிறது. இவ்வழியாக மைசூர் உட்பட கர்நாடக மாநிலங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து ஊட்டி வரும் சுற்றுலா பயணிகள் இவைகளை கண்டு ரசித்து செல்கின்றனர். மசினகுடி-தெப்பக்காடு சாலையில் தற்போது அடிக்கடி வலம் வரும் காட்டு யானைகள் கூட்டம் சுற்றுலா பயணிகள் கண்களில் அதிகம் தென்படுகிறது. அதனை புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.