மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மருத்துவமனையிலிருந்து சிகிச்சை பெற்று திரும்பிய முதலமைச்சர், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார்.
இதையடுத்து ஒரு வார ஓய்விற்கு பிறகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது வெளி மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். தூத்துக்குடியில் மின்சார கார் தயாரிப்பு தொழிற்சாலையை திறந்து வைக்கும் முதலமைச்சர், அதனை தொடர்ந்து பணி நியமன ஆணைகளை வழங்கி உரையாற்ற உள்ளார்.
பின்னர் தூத்துக்குடியில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டையும் தொடக்கி வைத்து முதலமைச்சர் உரையாற்ற உள்ளார். இதையடுத்து நண்பகல் 12 மணியளவில் தூத்துக்குடியில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.
உலகின் முன்னணி மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனமான வியட்நாம் நாட்டைச் சேர்ந்த வின்பாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடியில் ரூ.16,000 கோடியில் மின்சார கார் உற்பத்தி தொழிற்சாலையை அமைக்க ஒப்பந்தம் செய்தது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் கடந்த 2024ம் ஆண்டு நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்டது.
தூத்துக்குடியில்முதற்கட்டமாக ரூ.1,119.67 கோடியில் 114 ஏக்கரில் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. 2 பணிமனைகள், 2 கிடங்குகள் கார் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. மின்சார கார் உற்பத்தி ஆலையில் வி.எப்-6, வி.எப்-7 வகை கார்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளது. இங்கு ஆண்டுக்கு 1.50 லட்சம் வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலை தமிழ்நாட்டில் முதல் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலை என்பது குறிப்பிடத்தக்கது.