Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கடந்த தேர்தலை விட தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில்தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்ன? தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்

சென்னை: தமிழகத்தில் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு காரணம் என்ன என்பது குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்தார். தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் அளித்த பேட்டி: தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளிலும் மிகவும் அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 68,321 வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற்ற தேர்தலில் எந்த ஒரு மையத்திலும் மறுவாக்குப்பதிவு நடத்த மாவட்ட தேர்தல் அதிகாரியோ அல்லது தேர்தல் பார்வையாளர்களோ கடிதம் எழுதவில்லை. தேர்தல் நடைபெற்ற 19ம் தேதி இரவு தமிழக தேர்தல் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட வாக்குப்பதிவு சதவீதம் இறுதியானதல்ல. தேர்தல் செயலியில் (ஆப்) கிடைத்த தகவல் அடிப்படையில் சதவீதம் கணக்கிட்டதால் குளறுபடி நடைபெற்றது. உண்மையில் ஒவ்வொரு தொகுதிக்கும் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரி கையெழுத்திட்டு வெளியிடப்படும் அறிக்கைதான் இறுதியானது.

அன்றைய தினம் தூத்துக்குடி தொகுதியில் வாக்குப்பதிவு சதவீதம் உடனடியாக வெளியிடப்படவில்லை. அடுத்த நாள்தான் தேர்தல் அதிகாரி வெளியிட்டார். அதனால்தான் சதவீதத்தில் மாற்றம் ஏற்பட்டது. தமிழகத்தில் இறுதியாக 69.72% வாக்குகள் பதிவாகியுள்ளது. முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கூட, ஒவ்வொரு தொகுதியிலும் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை வாக்குப்பதிவு சதவீதம் கேட்டு தேர்தல் அதிகாரிகளை தொந்தரவு செய்யக்கூடாது. அதனால் அவர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்படும் என்று கூறியுள்ளார். தேர்தல் முடிந்த அன்று, நள்ளிரவு 11.59 மணிக்குள் வாக்குப்பதிவு சதவீதத்தை வெளியிட வேண்டும். அதுவும் கட்டாயம் இல்லை. அடுத்தநாள் கூட வெளியிடலாம். தமிழகத்தில் கடந்த தேர்தலைவிட வாக்குப்பதிவு சதவீதம் குறைந்ததற்கு தேர்தல் அதிகாரிகள் மட்டும் பொறுப்பல்ல, பொதுமக்களிடம் ஏன் வாக்களிக்கவில்லை என்று கேட்க வேண்டும்.

அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று தொடர்ந்து விழிப்புணர்வு செய்யப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் 27ம் தேதி வாக்காளர் வரைவு பட்டியல் வெளியிடப்பட்ட நாள் முதல், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை அரசியல் கட்சி தலைவர்களுடன் தொடர்ந்து ஆய்வு கூட்டம் நடத்தினர். வாக்காளர் பட்டியலில் இருந்து யார் பெயர் நீக்கப்பட்டுள்ளது, புதிதாக யார் பெயர் சேர்க்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதுபற்றி மாவட்ட தேர்தல் அலுவலர்கள் தெளிவாக கூறி உள்ளனர். அதேபோன்று, 4 சிறப்பு முகாம்களில் வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. தங்கள் பெயர் இருக்கிறதா? என்று சோதனை செய்ய பொதுமக்களுக்கு வலியுறுத்தப்பட்டது. ஓட்டர் ஹெல்ப்லைன் ஆப் மூலமும் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டது. அதனால், மக்களும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு மத்திய பிரதேசத்தில் வாக்கு இருப்பதாக சென்னை, தி.நகரில் உள்ள சிலர் கூறியுள்ளனர். இதுகுறித்து ஆய்வு செய்யப்படும். 1996 முதல் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது. அந்த கார்டை வைத்து இப்போதும் வாக்களிக்கலாம். ஒருவரின் அடையாள அட்டையில் உள்ள வாக்களர் எண் (எப்பிக் நம்பர்) வேறு யாருக்கும் வழங்கப்பட மாட்டாது. குளறுபடிகளை சரி செய்யதான் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைக்க கருத்து தெரிவிக்கப்பட்டது. வழக்கு இருப்பதால் இந்திய தேர்தல் ஆணையம் கட்டாயப்படுத்தவில்லை. தேர்தல் பணிக்காக வந்த வெளிமாநிலத்தை சேர்ந்த பார்வையாளர்கள் சொந்த ஊர் திரும்பி விட்டனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும்போது மீண்டும் வருவார்கள். வாக்களிக்க வந்தவர்கள், வெயில், விபத்தில் மரணம் அடைந்தால் ஆணையம் சார்பில் நிவாரணம் வழங்கப்பட மாட்டாது.