Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தேர்தல் ஆணையத்தின் மோசடிக்கு 100% ஆதாரம் உள்ளது: தப்பிக்க முடியாது, ராகுல் காந்தி ஆவேசம்

புதுடெல்லி: பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “தேர்தல் ஆணையம் தேர்தல் ஆணையமாக செயல்படவில்லை. அது அதனுடைய வேலையை செய்யவில்லை. கர்நாடகத்தின் ஒரு மக்களவை தொகுதியில் பெரியளவில் மோசடியை செய்துள்ளது. அதற்கு 100 சதவீத ஆதாரம் எங்களிடம் உள்ளது. ஒரு குறிப்பிட்ட தொகுதியை ஆய்வு செய்தபோது இதை கண்டுபிடித்தோம். இப்படித்தான் ஒவ்வொரு தொகுதியிலும் நடக்கும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.

ஒரு தொகுதியில் 45,50,60,65 வயதுடைய புதிய வாக்காளர்கள் சேர்ந்துள்ளனர். வாக்காளர் நீக்கம், சேர்க்கை என இந்த மோசடிகள் நடந்துள்ளன. நாங்கள் அவர்களை பிடித்துள்ளோம். தேர்தல் ஆணையம் வசமாக சிக்கி கொண்டுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறோம். நீங்களோ, உங்கள் அதிகாரிகளோ இந்த மோசடிகளில் இருந்து ஒருபோதும் தப்பிக்க முடியாது” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் ஆவேசமாக தெரிவித்தார்.

* தேர்தல் ஆணையத்தை ராகுல் மிரட்டுகிறார்

ராகுல்காந்தி பேச்சுக்கு தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கர்நாடகாவில் மக்களவை தேர்தலில் ஒரு தொகுதியில் மோசடியை அனுமதித்ததாக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவதோடு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஒரு அரசியலமைப்பு நிறுவனத்தை அச்சுறுத்துகிறார்.

கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 இன் பிரிவு 80 இன் படி உயர் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால் தீர்ப்பு வரும் வரை காத்திருப்பதற்கு பதிலாக, அரசியலமைப்பு அமைப்பான தேர்தல் ஆணையத்தை மிரட்டுகிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

* தகுதியற்றவர்களை வாக்களிக்க அனுமதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது - தேர்தல் ஆணையம்

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கேள்வி எழுப்பி உள்ளார். இதுகுறித்து ஞானேஷ்குமார் கூறுகையில், “இறந்தவர்களை, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களை அல்லது பல இடங்களில் வாக்காளர்களாக பதிவு செய்தவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க முடியுமா?

வௌிப்படையான செயல்முறைகள் மூலம் தேர்தல் ஆணையத்தால் தயாரிக்கப்படும் தூய வாக்காளர் பட்டியல், நியாயமான தேர்தல்கள் மற்றும் வலுவான ஜனநாயகத்துக்கான அடித்தளம் அல்லவா?” என கேள்வி எழுப்பினார். மேலும், “நாடு முழுவதும் தகுதியற்றவர்களை வாக்களிக்க அனுமதிப்பது அரசியலமைப்புக்கு எதிரானது. இதுபற்றி இந்திய குடிமக்கள் உள்பட நாம் அனைவரும் ஆழமாக சிந்திக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.