Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img

நீர்நிலைகளை மீட்டெடுக்கும் முயற்சியில் சென்னை மாநகராட்சி பசுமையாக மாறிய ராமந்தாங்கல் ஏரி: பறவைகளுக்கு தனி தீவு பட்டாம்பூச்சி தோட்டம்

சிறப்பு செய்தி

சோழிங்கல்லூரில் உள்ள ராமந்தாங்கல் ஏரி சுற்றுச்சூழல் முறையில் மனம் கவரும் வகையில் பசுமை ஏரியாக சென்னை மாநகராட்சி மீட்டெடுத்துள்ளது. சென்னை, இந்தியாவின் நீர்த் தலைநகரம் என்று அழைக்கப்படுவது முற்றிலும் உண்மையான ஒன்றாகும். இதற்கு காரணம் மூன்று ஆறுகள், நூற்றுக்கணக்கான ஏரிகள், பல நடுத்தர அளவிலான குளங்கள், கோயில் குளங்கள், இணைப்பு கால்வாய்கள், பரந்த சதுப்பு நிலம் மற்றும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய 4 பிரமாண்ட நீர்த்தேக்கங்கள் இந்நகரின் இயற்கை அழகைப் பறைசாற்றுகின்றன.

ஆனால், நவீன சென்னை, கடுமையான வறட்சி மற்றும் பேரழிவு வெள்ளங்களால் உலக அளவில் எதிர்மறை பெயரை பெற்றது. பல குற்றச்சாட்டுகள், குறைகள் மற்றும் தேவையற்ற ஆலோசனைகளுக்கு பிறகு, சென்னையும் அதன் மக்களும் ‘பசுமை நீலம்’ என்ற பெருமையை மீட்டெடுக்க சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. அப்படி சென்னை மாநகராட்சியின் தீவிர முயற்சியில் சோழிங்கநல்லூரில் உள்ள ராமந்தாங்கல் ஏரி பசுமையாக மாறியுள்ளது.

சோழிங்கநல்லூரில் அமைந்துள்ள ராமந்தாங்கல் ஏரி, நகர்ப்புற நீர்நிலையை மீட்டெடுப்பதற்கு ஒரு ஒளிரும் உதாரணமாக விளங்குகிறது. ஒரு காலத்தில் தெளிவற்ற எல்லைகளுடனும், புரோசோபிஸ் ஜூலி ப்ளோரா மரங்களால் மூடப்பட்டும், கடல் மற்றும் கால்வாயுடன் அருகாமையால் களிமண் நிறைந்த சதுப்பு நிலமாக இருந்த இந்த ஏரி, குப்பை மற்றும் கழிவுகளின் கிடங்காக மாறியிருக்கக் கூடிய நிலையில் இருந்தது. ஆனால், இன்று இது ஒரு புதிய பொலிவுடன் மிளிர்கிறது.

நமது அருகிலுள்ள நீர்நிலைகளை ஆழமாக புரிந்துகொள்வது, மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஒவ்வொரு ஏரியையும் பொழுதுபோக்கு மையமாக மாற்ற வேண்டியதில்லை. நமது நகரங்கள் ஒரு காலத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல, பல உயிரினங்களுக்கும் இல்லமாக இருந்தன என்பதை உணர வேண்டும். இந்த உயிரினங்களுடன் இணக்கமாக வாழ, பூமிக்கான மனிதர்களாக சிந்திப்பது முக்கியம்.

ஒரு விதமாக ஏரியின் தோற்றமே இல்லாமல் இருந்த இந்த ஏரி இன்று பார்ப்பதற்கே அருமையாக உள்ளது. இன்று, ராமந்தாங்கல் ஏரி தெளிவான சட்ட எல்லைகள், பாதுகாக்கப்பட்ட நீரியல் எல்லைகள், ஆழமாக்கப்பட்ட நீர் சேமிப்பு பகுதி மற்றும் பறவைகளுக்கான கூடு கட்டும் தீவு உள்ளிட்ட பல அம்சங்களுடன் புதுப்பொலிவு பெற்றுள்ளது. முழுவதும் சுற்றுச்சூழல் நிறைந்த ஏரியான இது, சென்னை மக்கள் பயன்பாட்டிற்கு விரைவில் திறக்கப்பட உள்ளது.

பசுமை நீல நகரம்

இயற்கை பாதுகாப்பு ஒரு விருப்பமோ, கட்டாயமோ அல்ல. அது பொது அறிவு. இந்த கருத்து, சென்னையில் உள்ள இது போன்ற ஏரிகளிலிருந்து வலிமையாக வெளிப்படுகிறது. ராமந்தாங்கல் ஏரியின் மறுசீரமைப்பு, சென்னையின் நீர் மற்றும் பசுமை மீட்பு முயற்சிகளுக்கு ஒரு ஒளிரும் நம்பிக்கைக் கீற்று. சென்னை மீண்டும் ‘பசுமை நீல’ நகரமாக உயர்ந்து, இயற்கையுடன் இணைந்து வாழும் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதி வருகிறது. இது சென்னைவாசிகளுக்கு மட்டுமல்ல, இயற்கையை நேசிக்கும் அனைவருக்கும் ஒரு அழகான, உற்சாகமூட்டும் செய்தியாகும்.

உலகளாவிய முன்மாதிரி

ராமந்தாங்கல் ஏரி இன்று நகரமயமாக்கலால் மறக்கப்பட்ட ஒரு கதையல்ல. மாறாக, சென்னை மாநகராட்சி பெருமையுடன் நகர திட்டமிடுபவர்களுக்கு காண்பிக்கும் ஒரு முன்மாதிரியாக மாறியுள்ளது. இது, ஏரிகளை பராமரிப்பதன் முக்கியத்துவத்தையும், சென்னை எவ்வாறு இதற்கு முன்மாதிரியாக விளங்குகிறது என்பதையும் உலகுக்கு உணர்த்துகிறது. சென்னை மாநகராட்சியும் இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளையும் (இஎப்ஐ) இணைந்து, மக்கள் தலைமையிலான இயக்கமாக, நிலைத்தன்மையை மையமாகக் கொண்டு சென்னையில் பல நீர்நிலைகளை மீட்டெடுத்து வருகின்றனர். இது மனிதர்களுக்கும் இயற்கைக்கும் இடையே இணக்கமான சமநிலையை உருவாக்குவதோடு, உலகின் பிற நகரங்களுக்கு ஒரு முன்மாதிரியாகவும் விளங்குகிறது.

சிறப்பம்சங்கள்

  • 10,500 மரங்கள் புதிதாக உருவாக்கப்பட்ட பசுமை பகுதியில் கலப்பு முறையில் நடப்பட்டுள்ளன.
  •  பறவைகளுக்காக பலவகை பழ மரங்களுடன் கூடிய கூடு கட்டும் தீவு.
  •  நீரை புழக்கத்தில் வைத்திருக்க சூரிய சக்தியால் இயங்கும் காற்றூட்டி.
  • பசுமை பகுதிக்கு நீர் பாய்ச்ச சூரிய சக்தியால் இயங்கும் தானியங்கி நீர் குழாய்கள்.
  •  24% அதிக நீரை தாங்கக்கூடிய ஏரி.
  •  மழைநீர் சேகரிப்பு பள்ளமாகவும் பயன்படுத்தப்படும் ஆழமான குழி.
  •  குழந்தைகளுக்கான விளையாட்டு மைதானம்.
  •  பட்டாம்பூச்சி தோட்டம்.
  •  பூந்தோட்டம்
  •  கழிவு உரமாக்கும் பகுதி.
  •  நடைபயிற்சி பாதை.