Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

எடப்பாடி கோரிக்கை; பிரதமர் நிராகரிப்பு: பரபரப்பு தகவல்

திருச்சி: தூத்துக்குடியில் நேற்று ஒன்றிய அரசு மூலம் புதுப்பிக்கப்பட்ட விமான நிலையம், வஉசி துறைமுகத்தில் 3வது வடக்கு சரக்கு தளம் உள்ளிட்ட மொத்தம் ரூ.4600 கோடி மதிப்பிலான திட்டப்பணிகள் திறப்பு மற்றும் துவக்க விழா நடந்தது. இதில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி தூத்துக்குடியில் இருந்து தனி விமானத்தில் நேற்றிரவு 10.15 மணிக்கு திருச்சி வந்தார்.அவரை கவர்னர் ஆர்.என்.ரவி, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசு, பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

அதேபோல் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை வரவேற்றார். அப்போது அதிமுக துணை பொது செயலாளர் கே.பி.முனுசாமி, தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.,வேலுமணி ஆகியோர் உடனிருந்தனர். இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி அங்கிருந்து கார் மூலம் திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலுக்கு வந்து தங்கினார்.முன்னதாக வரவேற்பு நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் சில வார்த்தைகள் பேசினார். அப்போது எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் ஒரு மனு அளித்தார். அதில், “விவசாயிகளுக்கான சிபில் ஸ்கோர் நடைமுறையிலிருந்து விலக்களிக்க வேண்டும். தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கு வழிவகுக்கும் ராணுவ வழித்தடத்தை அமைக்க வேண்டும். ராணுவ தளவாடத்தை சென்னை, கோவை, ஓசூர், சேலம், திருச்சியை இணைத்து செயல்படுத்த வேண்டும். கோதாவரி-காவிரி இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும்’’ என குறிப்பிட்டிருந்ததாக கூறப்படுகிறது. பிரதமரை வரவேற்ற போது, ‘‘உங்களை தனியாக சந்தித்து சில விஷயங்கள் பேச வேண்டும்’’ என்று எடப்பாடி கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் அதை பிரதமர் கண்டுகொள்ளாமல் ஓட்டலுக்கு சென்று விட்டார் என்று கூறப்படுகிறது.

இபிஎஸ் மீது நிர்வாகிகள் அதிருப்தி;

ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து விலகிய பிறகு மதுரை திருமங்கலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு அதிமுகவில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமரை சந்திக்க சென்றபோது, உதயகுமாரை அழைக்காமல் எடப்பாடி, நத்தம் விஸ்வநாதனை அழைத்துசென்றது தென்மாவட்ட அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உதயகுமார் ஓரங்கட்டப்படுகிறாரா, அவருக்கு கல்தா கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதா என அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. இதேபோல் ஓட்டலில் தன்னை சந்தித்த முன்னாள் அமைச்சர்கள் காமராஜ், விஜயபாஸ்கர், வளர்மதியையும் அவர் ஓட்டலிலேயே கழற்றி விட்டுவிட்டு மற்ற 3 பேருடன் சென்று பிரதமரை வரவேற்றது அதிமுக நிர்வாகிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.