Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இரட்டை இலை சின்னம் வழக்கில் சிக்கிய சுகேசுக்கு சிறையில் ‘ஏர் கூலர்’ வசதி: டெல்லி கோர்ட் அனுமதி

புதுடெல்லி: டெல்லி சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திர சேகருக்கு ஏர் கூலர் வசதி செய்து கொடுக்குமாறு டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற புகாரில் சிக்கியவரும், தொழிலதிபரிடம் ரூ.200 கோடி மிரட்டி பணம் பறித்ததாகக் கூறப்படும் வழக்கில் சிக்கியவருமான சுகேஷ் சந்திரசேகர், டெல்லி மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். டெல்லியில் கடும் வெப்பம் நிலவி வரும் நிலையில், சிறையில் இருக்கும் சுகேஷ் சார்பில் நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுனவில், ‘சிறையில் உள்ள சென்ட்ரல் கூலிங் சிஸ்டம் வேண்டுமென்றே முடக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு வெப்பம் இருப்பதால், சிறையில் இருக்கும் சுகேஷின் தோலில் தடிப்புகள் ஏற்பட்டுள்ளது. அவரது ரத்த அழுத்தம் குறைந்துள்ளது. பாதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிப்பது என்பது மட்டுமல்லாமல், கைதியின் உடல்நிலை தொடர்பான விஷயத்திலும் கவனம் செலுத்தப்பட வேண்டும். எனவே அவருக்கு ஏர் கூலர் வசதி செய்து தர வேண்டும்’ என்று கோரப்பட்டது.

இம்மனுவை விசாரித்த பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம், ‘சிறை விதிகளின்படி கைதிகளுக்கு ஏர் கூலர்களை வழங்குவதற்கான எந்த ஏற்பாடும் இல்லை என்றாலும், டெல்லியின் கடும் வெப்பத்தின் காரணமாக, உடல்நலம் கருதி சுகேசுக்கு ஏர் கூலர் வசதி செய்து கொடுக்க அனுமதிக்கப்படுகிறது’ என்று உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்றம் உத்தரவிட்டும், சுகேசுக்கு ஏர் கூலர் வசதி செய்து தரப்படவில்லை. அதனால் மாவட்ட நீதிபதி சஞ்சய் சர்மாவுக்கு, சுகேஷ் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில், குளிர்விப்பான் இன்னும் வழங்கப்படவில்லை என்று புகார் கொடுக்கப்பட்டுள்ளது.