Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பிரபல இயக்குனர் ரஞ்சித் மீது குவியும் புகார்: நடிகையிடம் அத்துமீறிய மற்றொரு டைரக்டரும் சிக்கினார்

திருவனந்தபுரம்: மலையாள சினிமாவில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் பிரபல இயக்குனர் ரஞ்சித் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நடிகை ஒருவரிடம் அத்துமீறிய மற்றொரு டைரக்டர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது. மலையாள சினிமாவில் பாலேரி மாணிக்கம் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது டைரக்டர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரபல மேற்குவங்க நடிகையான லேகா மித்ரா கொச்சி போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் டைரக்டர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் கேரள சினிமா அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபர், சினிமா வாய்ப்பு தருவதாக கூறி கடந்த 2012ல் பெங்களூருவிலுள்ள ஒரு ஓட்டலில் வைத்து டைரக்டர் ரஞ்சித் தன்னை நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கேரள டிஜிபியிடம் புகார் செய்தார். மேலும் தன்னுடைய நிர்வாண போட்டோக்களை ஒரு தமிழ் நடிகைக்கு அவர் அனுப்பி வைத்தார் என்றும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து டைரக்டர் ரஞ்சித் மீது கோழிக்கோடு கசபா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கையும் சேர்த்து ரஞ்சித் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. அதேபோல் பல விளம்பர படங்கள் மூலம் பிரபலமானவர் குமார் மேனன். இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஒடியன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் இவர் மீதும் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாக கூறி டைரக்டர் குமார் மேனன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு மலையாள இளம் நடிகை இமெயில் மூலம் கொச்சி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கொச்சி மரடு போலீசார் டைரக்டர் குமார் மேனன் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.